Breaking News

வரலாற்றை பறைசாற்றும் பழமையான நடுகல் கண்டெடுப்பு...

காஞ்சிபுரம்:

வாலாஜாபாத் அடுத்த வரலாற்று பெருமை வாய்ந்த ஊத்துக்காடு கிராமத்தில் பைரவன் குளத்தின் கரையில் வெட்ட வெளியில் புதர்களுக்கு மத்தியில் பழமையானதொரு நடுகல் உள்ளது. 

இது பற்றி வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஐய்குமார் தெரிவித்ததாவது..

 வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழமை வாய்ந்த இடங்களையும் தொல்லியல் சான்றுகளையும் கல்வெட்டுகளையும் ஆய்வு செய்து அப்பகுதியின் தொன்மையையும் வரலாற்றுச் சிறப்புகளையும் ஆவணம் செய்து மக்களிடமும் மாணவர்களிடமும் செய்தியை சேர்க்கும் வண்ணம் செயல்பட்டு வருகிறோம்.  

அதன் தொடர்ச்சியாக ஊத்துக்காடு பைரவன் குளம் என அறியப்படும் குளத்தின் கரையில் நடுகல் கல்வெட்டு ஆய்வு செய்தோம். 

இந்நடுகல்லின் முன்புறம் சோழர் காலத்தைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டு  உள்ளது.  ஊத்துக்காட்டு-கோட்டத்தின் ஒரு பிரிவான ஊத்துக்காட்டு நறுமஞ்சிறைக் காளியோட்டியின் மகனான ஒற்றியூர்-பெருமான் என்பவரால் இக்குளம் வெட்டப்பட்ட தாக கல்வெட்டு கூறுகிறது.

இதன் பின்புறம் வீரனின் சிற்பமும் பன்னிரண்டு வரிகளைக் கொண்ட கல்வெட்டு பொறிப்பும் இடம்பெற்றுள்ளது. 

முதல் இரண்டு வரிகள் பழமையான தெலுங்கு எழுத்துக்களாலும் மற்ற 10-வரிகள் பழங்கால தமிழ் மொழி எழுத்துக்களிலும் எழுதப்பட்டு உள்ளது.  



இதில் காட்டப்பட்டுள்ள சிற்பமானது அமர்ந்த நிலையிலும்  இடது கையை இடுப்பிலும், வலது கையில் கத்தியுடன் நன்கு வளைந்த மூங்கில் உடன் இணைக்கப்பட்டுள்ள தனது தலையை தானே அறிவது போன்று செதுக்கப்பட்டுள்ளது.  மேலும் இச்சிற்பத்தில் இடுப்பில் ஒரு வாளுடன் கழுத்தில் ஆபரணங்களும் சிறப்புற காட்டப்பட்டுள்ளது. 


கல்வெட்டு செய்தியின் அடிப்படையில் இக்குளம் வெற்றிகரமாக வெட்டி முடிக்கப்பட்டதன் பிரதிபலனாக இரவி அச்சல் பவடளி  என்பவர் இறைவனுக்கு தன் தலையை தானே வெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய செய்தியை அறிய முடிகின்றது. 



இந்த நடுகல் தூக்கு தலை வகையை சார்ந்து உள்ளது.  பொதுவாக தூக்கு தலை கல் என்பது போரில் தனது மன்னன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும் வெற்றி வாகை சூடியதற்காக வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் அமைக்கப்படும்.  ஆனால் ஒரு குளம் வெட்டி முடிக்கப்பட்டமைக்காக வீரன் ஒருவன் தன் தலையை கொய்துகொண்டு இறைவனுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளுக்கு கால்நடைகளைத் தான் பலியிடும் வழக்கம் இருந்து வந்தது. ஆனால் அறிய நிகழ்வாக இங்கு ஒரு நாட்டை போர்புரிந்து வெற்றி பெறும் வீரத்திற்கு இணையாக கருதப்பட்டு புதிய நீர் நிலையை வெற்றிகரமாக உருவாக்கியமைக்கு வீரன் தன்  தலையை கொய்து கொண்ட செய்தியானது நீர் தங்கள் உயிருக்கும் மேல் என  நீரைவிட உயிர் துச்சமானது என பழந்தமிழர்கள் மதித்து நீரின் அருமையை போற்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது. 

இக்களப் பணிக்கு வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் அவர்களின் தகவலின் பேரில் ஆய்வு செய்த தொல்லியல் துறை உதவி கல்வெட்டாளர் நாகராஜன், உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ்,  பிரசன்னா அவர்களும் இச்செய்தியை உறுதிப்படுத்தினர். மேலும்  இக்களப்பணியில் உத்திரமேரூர் கொற்றவை ஆதன், ஊத்துக்காடு யஷ்வந்த்குமார் ஆகியோரும் உதவினர்.

நம் முன்னோர்கள், ஒரு நாட்டை போர்புரிந்து வெற்றி பெறும் வீரத்திற்கு இணையாக கருதப்பட்டு புதிய நீர் நிலையை வெற்றிகரமாக உருவாக்கியமைக்கு வீரன் தன்  தலையை கொய்து கொண்ட செய்தியானது நீர் தங்கள் உயிருக்கும் மேல் என  நீரைவிட உயிர் துச்சமானது என பழந்தமிழர்கள் மதித்து நீரின் அருமையை போற்றியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  

ஆனால் இன்றோ நீர் நிலைகளை ஆக்கிரமித்து வாழ்வாதாரத்தை அழிக்கும் இழிச்செயலே அரங்கேறுகிறது என்பது வெட்ககேடாக உள்ளது..

No comments

Thank you for your comments