அங்கம்பாக்கத்தில் பல்லவர் கால அரிய சிற்பங்கள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், அங்கம்பாக்கம் என்ற கிராமம் வாலாஜாபாத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. இவ்வூரானது பாலாறு மற்றும் செய்யாறு சங்கமிக்க தொடங்கும் ஊராக அமைந்துள்ளது. இவ்வூரின் ஆற்றங்கரையோரம் உள்ள விஷ்ணு கோயில் அருகில் இரண்டு தெய்வ உருவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அது பற்றி வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு அமையத் தலைவர் அஜய்குமார் கூறியதாவது,
சிலை 1- அங்கம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மார்க்கண்டேயர் சிலை
இது மிருகண்டு என்ற கடுந்தவ முனிவருக்கும் அவரது துணைவியார் மித்ராவதிக்கும் நீண்ட நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்த்தால் காசிக்கு சென்று தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளையான மார்கண்டேயரின் சிலையாகும்.
![]() |
| அங்கம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட மார்க்கண்டேயர் சிலை |
இச்சிலையானது மணற் பாறையால் செதுக்கப்பட்டுள்ளது. சிற்பமானது இடது பக்கம் பார்த்தவாறு இடது காலை நிமிர்த்தியும் வலது காலை தரையில் வைத்து மண்டியிட்டு அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இடது கையில் மலரும், மார்பு பகுதியில் (பூணூல்) யஜ்னோபவீதம் காட்டப்பட்டுள்ளது, அழகிய வேலைப்பாடுடன் கூடிய இச்சிற்பம் பல்லவர் கால கலைப்பாணியை ஒத்துள்ளது. அமர்ந்த நிலையில் உள்ள இச்சிற்பம் குழந்தை முகத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளதால் இது மார்க்கண்டேயர் சிற்பமாக இருக்கலாம் என்று கருத முடிகின்றது.
மார்க்கண்டேய புராணம் என்பது பதினெட்டு முக்கிய புராணங்களில் ஒன்றாகும். இந்த மார்க்கண்டேயர் இரண்டு புராணங்களில் மைய கதாபாத்திரமாக திகழ்கின்றார். ஒன்று சிவன் உடனும், மற்றொன்று விஷ்ணு உடனும் இணைக்கப்பட்ட புராண கதையாகும். பெரும்பாலும் விஷ்ணுவின் வலதுபக்கம் மார்க்கண்டேயரும், பாதத்திற்கு அருகே இடது பக்கம் பூமாதேவியும் காட்சி அளிக்கும் விதமாக சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பெரும்பாலும் புடைப்புச் சிற்பங்களாகவே காண முடிகின்றது.
சிலை 2: அங்கம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட பூமாதேவி சிலை
இச்சிலையும் மணற்பாறை கொண்டே செதுக்கப்பட்டுள்ளது. இச்சிலை இடது பக்கம் பார்த்தவண்ணம், வலது காலை நிமிர்த்தி, இடது காலை தரையில் மண்டியிட்டு அமர்வது போல வடிவமைக்கப்பட்டுள்றது. வலது கையில் மலர் மொட்டு காட்டப்பட்டுள்ளது. இச்சிற்பமானது உடைந்த நிலையில் இரண்டு பாகமாக உள்ளது. பல்லவர் கால கலை அமைப்பில் கிடைக்கப்பட்ட இச்சிற்பத்தை பூமாதேவி என்று கருதப்படுகின்றது.
![]() |
| அங்கம்பாக்கத்தில் கண்டெடுக்கப்பட்ட பூமாதேவி சிலை |
பல்லவர்கள் காலத்தில் பெரும்பாலான நேரங்களில் இந்த இரண்டு சிற்பங்களும் புடைப்புச் சிற்பங்களாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, மாமல்லபுரத்தில் உள்ள மகிஷமர்தினி குகையில் சயன நிலை விஷ்ணுவின் எதிரில் வலதுபக்கம் மார்க்கண்டேயரும் இடது பக்கம் பூமாதேவியும் உள்ள சிற்பத்தை காணமுடிகின்றது, அதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மலையடிக்குறிச்சியிலும் விஷ்ணு குடவரை கோவில் மற்றும் அதே ஊரில் உள்ள சிவன் கோயிலிலும் மார்க்கண்டேய சிற்பத்தை காணமுடிகின்றது.
அங்கம் பாக்கத்தில் கிடைத்த இந்த இரண்டு சிற்பங்களும் புடைப்புச் சிற்பமாக அல்லாமல் தனி சிற்பமாக, பாறையில் செதுக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பம்சமாகும். மேலும் அரியவகையை சேர்ந்த்தாகும். இக்கோவிலில் பிற்காலத்தைச் சேர்ந்த விஷ்ணு சிற்பம் நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும் பார்க்க முடிகின்றது. எனவே இவ்வூரில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த விஷ்ணு கோயில் இருந்திருக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் மூன்று நதிகள் சங்கமிக்கத் தொடங்கும் இடமான அங்கம்பாக்கம் கிராமத்தில் முறையான களஆய்வும் அகழாய்வும் மேற்கொண்டால் இவ்வூரின் தொன்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர முடியும். அங்கம் பாக்கத்தில் பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்த தேவி அல்லது தவ்வை சிலை ஒன்று வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் அவர்கள் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் கண்டுபிடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இக்களப்பணிக்கு வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத் தலைவர் அஜய்குமார் அவர்கள் அளித்த தகவலின் பேரில் ஆய்வு செய்த தொல்லியல் துறை உதவி கல்வெட்டாளர் நாகராஜன், உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ், பிரசன்னா ஆகியோரும் இச்செய்தியை உறுதி செய்துள்ளனர். மேலும் இக்களப்பணியில் அங்கம்பாக்கம் ஊராட்சி மனறத் தலைவர் ஏழுமலை, துணைத் தலைவர் முருகேசன், கன்னடியன் குடிசை சண்முகம் ஆகியோரும் உடனிருந்தனர்.
தொகுப்பு : M.D. அஜய்குமார், 8270020800
தலைவர், வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத் தலைவர்


No comments
Thank you for your comments