Breaking News

பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம், கொழுவாரியில், ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கொழுவாரி ஊராட்சியில் 2 கோடியே 88 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 வீடுகள் கொண்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை திறந்து வைத்து, சமத்துவபுர வளாகத்தில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச் சிலையினையும் இன்று (05-04-2022) திறந்து வைத்தார்.

அனைத்து மக்களும் சாதி, மத பேதமின்றி சமமாக வாழ்ந்திட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பெயரில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட உன்னதத் திட்டம் தான் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டமாகும். 

முத்தமிழறிஞர் கலைஞரால் விழுப்புரம் மாவட்டத்தில் நான்கு சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. 

ஐந்தாவது சமத்துவபுரமாக 2010-2011ஆம் நிதியாண்டில் கொழுவாரி ஊராட்சியில் சமத்துவபுரம் கட்டப்பட்டு திறக்கும் நிலையில் ஆட்சி மாற்றத்தால் திறக்கப்படாமல் இருந்தது. இந்த சமத்துவபுரம் கொழுவாரி கிராமத்தில் 7.00 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

இச்சமத்துவபுரத்தில் 100 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஒரு வீட்டின் பரப்பளவு 249 சதுர அடி, தலா ஒரு வீட்டின் மதிப்பு 1.92 இலட்சம் என மொத்தம் 100 வீடுகள் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. சமத்துவபுரத்தின் முகப்பில் தந்தை பெரியாரின் மார்பளவு திருவுருவச்சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. 

தனிநபர் வீட்டு குடிநீர் இணைப்பாக ரு.14.20 இலட்சம் மதிப்பீட்டில் 100 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் இதர குடிநீர் திட்டப் பணிகள் ரூ.7.59 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

சிறுவர், சிறுமியர் விளையாடும் வகையில் ரூ.7.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா, கைப்பந்து, மற்றும் கபடி மைதானம் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கலைஞர் விளையாட்டுத்திடல் மற்றும் கலைஞர் விளையாட்டுப் பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தெருக்களில் ரூ.3.42 மதிப்பீட்டில் மின்விளக்குகள்,  ரூ.7.64 இலட்சம் மதிப்பீட்டில் அனைத்து தெருக்களிலும் மழைநீர் வடிகால் வசதிகள், அனைத்து தெருக்களிலும் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அவ்வளாகத்தில் ரூ.2.75 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து, ரூ.10.19 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம் மற்றும் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நூலகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, டாக்டர் இரா.இலட்சுமணன்,  எ.ஜெ.மணிகண்ணன்,  சி.சிவகுமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு முதன்மைச் செயலாளர்  பி. அமுதா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன்.பி.நாயர்,  விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் த.மோகன்,  மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments