Breaking News

இலவசங்கள் வேண்டாம்.. வேலைவாய்ப்பை உருவாக்குங்கள்: - விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: 

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான பணிகளில் தற்போது முதலே ஈடுபட வேண்டும்‍. இல்லையென்றால் இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பொருளாதார சரிவுதான் என்பதால், இலவச திட்டங்களை தவிர்த்து, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு செயல்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று  வெளியிட்டுள்ள தனது அறிக்கையில்,

"இன்றைய ஆட்சியாளர்கள் எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, இலவசங்களை தருவதாகக் கூறுவது, தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா செய்வது போன்ற செயல்களால் மக்களை முட்டாளாக்குவது நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். 

வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேற்றமடைய செய்வதில் ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டுமே தவிர, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளித் திணிப்பதோடு, தலைவிரித்தாடும் லஞ்சம் மற்றும் ஊழலால் நாடு முன்னேறாமல் பொருளாதாரத்தில் மந்த நிலையை அடைய காரணமாகிறது.

இலவசத் திட்டங்களால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் பல லட்சம் கோடி கடனில் உள்ளன. குறிப்பாக தமிழகத்தின் கடன் சுமை ஆறு லட்சம் கோடியாக உள்ளது. 

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமே பொருளாதார சரிவுதான் என்பதால், இலவச திட்டங்களை தவிர்த்து, வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு போன்ற பல்வேறு தொலை நோக்கு திட்டங்களை செயல்படுத்தி, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அவ்வாறு செய்தால் மட்டுமே, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை பாதுகாக்க முடியும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பதுபோல் இல்லாமல், நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் வழிவகைகளை ஆராய்ந்து அதற்கான பணிகளில் தற்போது முதலே ஈடுபட வேண்டும். 

இல்லையென்றால் இலங்கையை போன்று நெருக்கடி நிலை இந்தியாவில் ஏற்பட வாய்ப்புள்ளது." என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


No comments

Thank you for your comments