கோவை மக்கள் அச்சம்.. குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்!
கோவை :
கோவை மாவட்டம் சிறுவாணி அணையில் 22 அடிக்கு நீர் இருப்பு இருந்த போதிலும் கேரள அரசின் பிடிவாதத்தால் நீர்புகு கிணற்றில் உள்ள நான்காவது வால்வு ஷட்டர் மூடப்பட்டிருக்கிறது.அதை திறக்க தமிழக அரசு உயரதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் தினமும் 5.5 கோடி லிட்டரே எடுக்க முடிகிறது. இதன் காரணமாக 10 முதல் 11 நாட்களுக்கு ஒருமுறையே மக்களுக்கு குடிநீர் கிடைக்கிறது. இதனால் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக - கேரள ஒப்பந்தப்படி சிறுவாணி அணையில் இருந்து நாளொன்றுக்கு 10.1 கோடி லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். கோடை காலங்களில் இருப்பு குறையும்போது எடுக்கப்படும் அளவு குறையும். அதற்கேற்ப பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்படும் கால இடைவெளி நாட்கள் அதிகரிக்கும். சில ஆண்டுகளுக்கு முன் பருவ மழை பேயாதபோது குறைந்தபட்ச கொள்ளளவுக்கு கீழிருந்த தண்ணீரை கூட கேரள அரசுடன் பேச்சு நடத்தி கோவைக்கு கொண்டு வந்து மக்களின் தாகம் தீர்க்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது.
அணையின் மொத்த உயரமான 50 அடியில் 22 அடிக்கு தண்ணீர் இருப்பு இருக்கிறது. இருப்பினும் நாளொன்றுக்கு 5.5 கோடி லிட்டரே தண்ணீர் எடுக்கப்படுகிறது. நீர்புகு கிணற்றில் உள்ள நான்காவது வால்வுக்கான ஷட்டரை கேரள நீர்ப்பாசனத்துறையினர் மூடி வைத்திருக்கின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதியும் வால்வை திறக்க அம்மாநில அதிகாரிகள் முன்வரவில்லை. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியபோது 'அரசு துறை செயலர்கள் மட்டத்தில் பேச்சு நடத்தச் சொல்லுங்கள்' என கூறியிருக்கின்றனர். இத்தகவலை குடிநீர் வடிகால் வாரியத்தினர் துறை செயலரின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
ஆனாலும் ஷட்டரை திறக்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதனால் தற்போது பெறப்படும் 5.5 கோடி லிட்டர் தண்ணீரில் வழியோர கிராம மக்களுக்கு ஒரு கோடி லிட்டர் வழங்கி விட்டு மீதமுள்ள 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மாநகராட்சி பகுதி மக்களுக்கு 10 அல்லது 11 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை செய்யப்படுகிறது.
அப்போது சேமித்து வைக்காமல் மக்கள் விட்டு விடக்கூடாது என்பதற்காக சப்ளை செய்யப்படும் இடங்கள் மற்றும் நேரம் தொடர்பாக ஒரு நாளைக்கு முன்னதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம் எடுக்காத அளவுக்கு சமாளித்து வருகிறது.
குடிநீர் வடிகால் வாரியத்தினரிடம் இதுகுறித்து கேட்ட போது 'சிறுவாணி அணை நீர்புகு கிணற்றில் உள்ள நான்காவது வால்வு இன்னும் திறக்கப்படவில்லை. தினமும் 5.5 கோடி லிட்டர் தண்ணீரே எடுக்கப்படுகிறது. சிறுவாணி அணை பிரச்னை தொடர்பாக உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று விட்டோம்' என்றனர்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது 'சிறுவாணியில் இருந்து நாளொன்றுக்கு 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும். ஆனால் மாநகராட்சி பகுதிக்கு 4.5 கோடி லிட்டரே வந்தடைகிறது.
பாதிக்கும் குறைவாகவே கிடைப்பதால் சப்ளை நாட்கள் இடைவெளி அதிகரிக்கிறது. அரசு துறை செயலர்கள் கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினால் மட்டுமே ஒப்பந்தப்படி தண்ணீர் எடுக்க முடியும். இல்லையெனில் பருவ மழை துவங்கும் வரை இதே நிலை தொடர்ந்து நீடிக்கும். அடுத்த மாதம் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பிருப்பதால் உயரதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

No comments
Thank you for your comments