கிசான் கடன் அட்டையில் கடன் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம்... ஆட்சியர் ஆர்த்தி அறிவுறுத்தல்...
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.04.2022) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளித்தனர்.
விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.
விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அவற்றை விவசாயிகள் அறிந்து நல்ல முறையில் பயன்படுத்தி வேளாண் தொழிலை மேம்படுத்தி, விவசாய பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்தி, தங்கள் வாழ்வாதாரங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
பயிர் சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், கடன் பெறும் விவசாயிகள் குறிப்பட்ட காலக்கெடுவில் கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில், மத்திய அரசு பங்களிப்பு 3 சதவீதத்துடன் கூடுதலாக தமிழக அரசு 4 சதவீதம் வட்டி தள்ளுபடியுடன் விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீத, வட்டியில்லா கடன் வழங்க இருப்பதால் உரிய காலக்கெடுவிற்குள் கிசான் கடன் அட்டையில் கடன் பெற்று விவசாயிகள் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ் 10 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.44.90 இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறையின் சார்பில் தரிசு நில தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சிறப்பாக செயலாற்றிய 3 நபர்களுக்கு சிறந்த விவசாயிகளுக்கு பரிசுத்தொகைகள், வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் 10 நபர்களுக்கு உழவர் அட்டைகள் (KISAN CREDIT CARD) ஆகியவற்றை டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சிவ ருத்ரய்யா, வேளாண் துறை இணை இயக்குநர் திரு.இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.



No comments
Thank you for your comments