Breaking News

சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது “அன்னைத்தமிழில் அர்ச்சனை ” திட்டம் - ஆட்சியர் ஆர்த்தி



காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்து சமய  அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் “அன்னைத்தமிழில்  அர்ச்சனை  ” திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி இ.ஆ.ப,. அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக திருக்கோயில்களில், “தமிழில் அர்ச்சனை”  எனும் திட்டமானது கடந்த 1996 ஆம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்கிற திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட உத்தரவிட்டுள்ளார்கள்.

பிற மாநிலங்களைப் போல, தமிழகத்திலும் இந்து கோயில்களில், வட மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வந்த நிலையில், உலகின் தொன்மையான தமிழ் மொழி திருக்கோயில்களில் புறக்கணிக்கப்படுவதாக, பல்வேறு தமிழ் அமைப்புகள், சமீபகாலமாக கோரிக்கையினை முன்வைத்ததை தொடர்ந்து, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவித்துள்ள “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்கிற இத்திட்டத்தின் மூலம் தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை நிறை வேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, முதலாவதாக சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 03.08.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள 47 முதுநிலை திருக்கோயில்களில், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில்களில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” என்ற அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டு, அதில் திருக்கோயில்களில், தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண், ஆகிய விவரங்கள் பத்தர்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்தில் பன்னிரு ஆழ்வார்களும், அறுபத்து மூன்று  நாயன்மார்களும் தமிழ் மொழியிலேயே இறைவனைப் பாடிப்பரவினர். எனவே தாய் மொழியில் அர்ச்சனை செய்வதை ஊக்குவிக்கவும், அர்ச்சகர்கள் சொல்வதை பக்தர்கள் புரிந்து கொள்வதற்காகவும் போற்றி நூல்கள் உறுதுணையாக இருக்கும் என்பதாலும் தமிழில் போற்றி புத்தகங்கள்  அச்சிடப்பட்டு திருக்கோயில்களுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம்  திருக்கோயில்களில் தமிழ் வழிபாடு ஊக்குவிக்கப்படுவதுடன், பொதுமக்களும் தாம் அறிந்த தமிழ்மொழி மூலம் அர்ச்சனைசெய்யப்படுவதை கேட்டு  அகமகிழ்வார்கள். எனவே அடுத்தக்கட்டமாக  536 திருக்கோயில்களில் “அன்னை தமிழில் அர்ச்சனை” செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் நகர் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டமானது செவ்வனே நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பேராதரவைப் பெற்று, அனைத்து பக்தர்களும்,  இறைவனின் திருப்புகழை அறியும் வண்ணம், பக்தி தமிழை மென்மேலும் வளர்த்திடும் சீரிய நோக்குடன் இத்திட்டமானது சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. இதனால் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும், இறைவனுக்கு,  தங்களது தாய் மொழியாம் தமிழ் மொழியில், அர்ச்சனை செய்யப்படுவதை  காது குளிரக் கேட்டு, அதன் பொருள் அறிந்து, மெய் மறந்து வழிப்படுகின்றனர், இதனால் இத்திட்டம் பெறும் வரவேற்பைப் பெற்று, வெற்றித்திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டம் செயல்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments