வாலாஜாபாத் சேர்க்காட்டு துலுக்கானத்தம்மன் கோயிலில் இரண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள சேர்க்காடு என்ற பகுதியில் துலுக்கானத்தம்மன் என்ற பெயரில் பழம் பெருமை வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வளாகத்தில் தென்மேற்கில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஜயநகர மன்னர்கள் காலத்திய நடுகல் ஒன்றும், வடமேற்கில் அதற்கும் பிந்தைய கால நடுகல் ஒன்றும் இருப்பதை வாலாஜாபாத் வட்டார ஆய்வு மையத்தினர் கண்டுபிடித்துள்ளனர்.
அது பற்றி வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவர் அஜய்குமார் குறிப்பிட்டதாவது
நடுகல் அல்லது வீரக்கல் (Hero Sotne) பொதுவாக போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கும், மன்னனின் வெற்றிக்கு தன்னையே பலி கொடுத்துக்கொள்ளும் வீரர்களுக்கும், ஆநிரை (பசுக்கள்) கவர்தலுக்கும் மீட்டலுக்கும் செல்லும் போது வீரமரணம் அடைபவர்களுக்கும், ஊர் அல்லது நாட்டு மக்களின் நன்மை வேண்டி நேர்த்திக்கடன் செய்பவர்களுக்கும் அமைக்கப்பட்டு வழிபாட்டில் இருந்து வருகிறது.
வாலாஜாபாத் பகுதியில் வில்லிவளம் மற்றும் ஊத்துக்காடு போன்ற பகுதிகளிலும் நடுகற்கள் உள்ள செய்திகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
நடுகல் 1
வாலாஜாபாத் சேர்க்காடு துலுக்கானத்து அம்மன் கோயில் வளாகத்தில் தென்மேற்கில் 15 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்கள் காலத்திய நடுகல் உள்ளது. இதிலுள்ள வீர்ன் வலது கையால் தன் தலையை தானே வெட்டிக்கொள்வது போன்றும், இடது கையில் உள்ள வால் தரையை நோக்கியும், தலையில் கொண்டையுடனும், கழுத்தில் ஆபரணமாக மணியும், இடுப்பில் மடிப்புகள் தெரியும் வகையில் அரை ஆடையுடனும் கைகளில் காப்பும், வலது காலில் சிலம்புடனும், இடது கால் வலது கால் பக்கம் நோக்கியவாறும் நேர்த்தியாக சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து என தொல்லியல் துறையைச் சேர்ந்த உதவி கல்வெட்டாய்வாளர் நாகராஜன், உதவி தொல்லியல் ஆய்வாளர்கள் ரமேஷ் மற்றும் பிரசன்னா ஆகியோரும் உறுதி செய்துள்ளனர்.
காஞ்சிக்கும் மதுரைக்குமான தொடர்பு
இச்சிலையை சாவாரங்கல், காவல் தெய்வம் என அழைத்து இவ்வீரனின் தலை மீது கை வைத்து வணங்கி வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வரும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் இச்சிலைக்கு படையலிட்டும் வழிபாடு செய்கிறார்கள்.
மதுரை சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள ஸ்ரீமூலநாத சுவாமி கோயில் கோபுரம் அருகே சாவாரங்கல்லு என்ற பெயரில் ஒரு நடுகல் உள்ளது. அங்கு ஆண்டுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் சென்று வழிபடுவதாக வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சாவாரங்கல் என்ற சொல் தொண்டைமண்டலமான காஞ்சிபுரத்து சேர்க்காட்டிலும், பாண்டி நாட்டு தென்கரையிலும் பயன்பாட்டில் உள்ளதன் மூலம் ஏதோ ஒரு நெருங்கிய தொடர்பு இரு நகரங்களுக்கும் இடையில் இருந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.
நடுகல் 2
இதே கோயிலில் வடமேற்கு பகுதியில் சிறிய அளவில் மேலும் ஒரு வீரனின் நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வீரனின் வலது கையில் வில்லேந்தி போருக்கு செல்வது போன்று அமைக்கப்பட்டுள்ளது, இடது தோளில் அம்புராத்தோணி எனப்படும் அம்புக்கூடு உள்ளது. இந்த நடுகல் சாவாரங்கல்லுக்கு பின்பு சில காலம் கழித்து பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம். இந்த நடுகல்லை காவல் தெய்வம் என்றும் சிலர் அனுமன் என்றும் வழிபடுகிறார்கள். இக்கோயிலுக்கு தினமும் வந்து வழிபட்டு வரும் பக்தர்களில் ஒருவரான ஆடியபாதம் என்பவர் இச்சிலையை வணங்கினால் காத்து கருப்பு மற்றும் கெட்டவைகள் நீங்கி நன்மையே நடைபெறும் எனக் கூறினார்.
வீரத்தின் அடையாளமான இந்த இரண்டு நடுகற்கள் வழிபாட்டில் இருப்பதும், சிறுதெய்வ வழிபாட்டு முறைகள் பெருந்தெய்வ வழிபாட்டு முறைகளோடு இன்றளவும் இரண்டறக்கலந்து நிலைத்து நிற்பதற்கும் அரிய சாட்சியாக இது அமைந்துள்ளது.
இந்த நடுகற்கள் காணப்பட்ட துலுக்காணத்தம்மன் கோயிலின் நிர்வாகிகளில் ஒருவரான இல. சசிக்குமார் அவர்கள், இவ்வம்மன் தெய்வமானது பல சமூகங்களை சார்ந்த 500க்கும் மேற்பட்ட சேர்க்காடு, வாலாஜாபாத், ஊத்துக்காடு மற்றும் சென்னை உள்ளிட்ட வெளியூரைச் சேர்ந்த குடும்பத்தினர்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறது என தெரிவித்தார்.
அஷ்ட காளிகளில் நான்காவது காளியை உலகளந்தாள் அல்லது உலக நாயகி என வழிபடுகிறார்கள். இக்காளியை புல், செடி, மரங்கள் துளிர்க்காத வனத்தில் அமைத்தால் அப்பகுதி செழிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்ததாக தெரியவருகிறது. இப்படி அழைக்கப்படும் காளியை துளிர்க்காத வனத்து அம்மன் எனத் துதித்து இப்பெயர் பிற்காலத்தில் மருவி துலுக்கானத்தம்மன் என்றாகியது.
இச்சிலையை பற்றிய எழுத்துக்களோ கல்வெட்டோ எதுவும் இங்கு இல்லை. ஊர்நலன் வேண்டியும் காளியிடம் வேண்டிக்கொண்டு உயிர்துறந்தவர்களுக்கும் நடுகல் வைக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இதனைக் கொண்டு நோக்கும்போது காளியாகிய இந்த துலுக்கானத்தம்மனிடம் வீரன் ஒருவன் தனது பகுதி மக்களின் நலன் மற்றும் செழிப்பு வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியிருக்கலாம் என கருத முடிகிறது.
மேலும் இக்களப்பணியில் M.K. யஸ்வந்த்குமார், கொற்றவை ஆதன், ஆய்வு மைய பொருளாளர் நிர்மல்குமார், கல்லூரி மாணவர்கள் குணாள் மற்றும் சஞ்சய்குமார், ஆலய நிர்வாகிகள் இல சசிக்குமார், குருபாதம் ஆகியோரும் உடனிருந்தனர்.


No comments
Thank you for your comments