தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை மீண்டும் தொடங்குகிறது
சென்னை :
தமிழக அரசுத்துறைகளின் மானிய கோரிக்கை மீது விவாதிப்பதற்காக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (06-04-2022)) தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் மே 10ம் தேதி வரை 22 நாட்கள் நடைபெறவுள்ளது.
சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க., பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2022-23ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை (பொது பட்ஜெட்) 18-03-2022 அன்றும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கை 19-03-2022 அன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. அந்த பட்ஜெட் கூட்டத்தொடர் 24-ம் தேதி நிறைவடைந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, துறை வாரியான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை 06-04-2022 முதல் 10-05-2022 வரை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் அப்பாவு தலைமையில் ஆய்வுக்குழு கூட்டம்
இதற்கிடையில், சென்னை தலைமைச்செயலகத்தில் மார்ச் 30ம் தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, அ.தி.மு.க. எம்.எல்.ஏ., எஸ்.பி.வேலுமணி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., அசன் மவுலானா, பா.ம.க. எம்.எல்.ஏ., ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சபாநாயகர் அப்பாவு வெளியிட்டார். இதுதொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அவர், “எந்தெந்த தேதிகளில் எந்தெந்த மானியக் கோரிக்கைகள் நடைபெறலாம் என்பதை உறுதி செய்வதற்காக, அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் என்னுடைய தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எதிர்கட்சியினரும், ஆளுங்கட்சியினரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஒருமனதாக ஒரு முடிவெடுக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல், மே மாதம் 10-ம் தேதி வரை துறை மானியக் கோரிக்கைகளுக்கான கூட்டத்தொடரை நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கூட்டத்தொடர் 22 நாட்கள் நடைபெறும். கூட்டத்தொடரின் கேள்வி நேரம் மற்றும், விதி 110-ன் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளும் நேரலை செய்யப்படும்.
கூட்டத் தொடரின் முதல் நாளான ஏப்ரல் 6-ம் தேதி நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வரும் அரசு விடுமுறை நாட்களில் கூட்டத்தொடர் நடைபெறாது” என்று அவர் கூறினார்.
மானியக் கோரிக்கைகள்
இப்போது துறை வாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்ற சட்டசபை கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது.
முதல் நாளான நாளை (06-04-2022) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார்.
இதே போல் ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும். முக்கிய அறிவிப்புகள் இருந்தால் 110 விதியின் கீழ் அவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இதனையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில், நீர்வளத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை. கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் செயல்பாடுகள் குறித்து நேற்று (04-04-2022) ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில், முதலமைச்சர் அவர்கள், கடந்த நிதியாண்டில் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
துறை வாரியாக புதிய அறிவிப்புகள்
மேலும், இந்த நிதியாண்டின் மானியக் கோரிக்கையில் துறை வாரியாக அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கூட்டுறவுத் துறை அமைச்சர்இ. பெரியசாமி, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் / முதன்மைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளர் பி. அமுதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காரசார விவாதங்கள்
தமிழகத்தில் சமீபகாலமாக பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. சாலை விபத்துகளும் அதிகமாக காணப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களை சட்டசபையில் எடுத்துச்சொல்ல அ.தி.மு.க., பா.ஜ.க., ஆகிய எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டும். எனவே சட்டசபையில் காரசார விவாதங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி உயர்வு
சமீபத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. இந்த சொத்து வரி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக, பாஜக, அமமுக, சார்பில் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஏப்ரல் 5ம் தேதி (இன்று), பாஜக சார்பில் ஏப்ரல் 8ம் தேதியும், அமமுக சார்பில் ஏப்ரல் 10ம் தேதியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியே போராட்டம் நடத்திய அதே வேகத்தை சட்டசபையிலும் அதிமுக காட்ட முயற்சிக்கும். எனவே சட்டசபையில் பரபரப்பு ஏற்படக்கூடும். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சிகள் மும்முரம் காட்டுவதால் 22 நாட்கள் நடைபெறும் இந்த சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்புக்கும், சலசலப்பிற்கும் பஞ்சம் இருக்காது.
06-04-2022
நீர்வளத்துறை
07-04-2022
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
08-04-2022
கூட்டுறவு
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு
11-04-2022
உயர்கல்வித்துறை
பள்ளி கல்வித்துறை
12-04-2022
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
கட்டடங்கள்(பொதுப்பணித்துறை)
13-04-2022
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
கால்நடை பராமரிப்பு
மீன்வளம் மற்றும் மீனவர் நலன்
பால்வளம்
18-04-2022
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
இயற்கை சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு
19-04-2022
நீதி நிர்வாகம்
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள்
சட்டத்துறை
செய்தி மற்றும் வளம்பரம்
எழுதுபொருள் மற்றும் அச்சு
20-04-2022
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை
குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
21-04-2022
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை
22-04-2022
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை
25-04-2022
வனம்( சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை)
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்(சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை)
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை
26-04-2022
எரிசக்தித் துறை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை
27-04-2022
தொழில்துறை
தமிழ் வளர்ச்சி( தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை)
28-04-2022
கைத்தறி மற்றும் துணிநூல்
கதர் , கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்( கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை)
வணிக வரிகள்(வணிக வரி மற்றும் பதிவுத்துறை)
முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவு
29-04-2022
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
04-05-2022
இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள்- நிர்வாகம்( உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை)
போக்குவரத்துதுறை
தகவல் தொழில்நுட்பவியல் துறை
05-05-2022
இந்து சமய அறநிலையத்துறை
(சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை)
சுற்றுலா- கலை மற்றும் பண்பாடு
06-05-2022
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
07-05-2022
காவல்( உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை)
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
மே 9-05-2022
காவல்
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள்
திட்டம், வளர்ச்சி மற்றும் முயற்சிகள் துறை
நிதித்துறை
மனித வள மேலாண்மைத்துறை
ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நன்மைகளும்
மே 10-05-2022
பொதுத்துறை
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை
* மாநில சட்டசபை
* கவர்னர் மற்றும் அமைச்சரவை
அரசினர் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும்
No comments
Thank you for your comments