சென்னை மாநகராட்சியில் 9 தேதி பட்ஜெட் தாக்கல்
சென்னை:
வருகிற 9ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் பெண் மேயராக பிரியாவும், துணை மேயராக மு.மகேஷ் குமாரும் கடந்த மாதம் பதவியேற்றனர். அதனை தொடர்ந்து மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு தலைவர்கள், நியமன குழு உறுப்பினர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் பொறுப்பேற்றுக்கொண்டதை அடுத்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான கூட்டத்தை நடத்த கடந்த சில நாட்களாக ஆலோசிக்கப்பட்டது.
மேயர், துணை மேயர், கமிஷனர் மற்றும் நிலைக்குழு தலைவர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்ட பிறகு பட்ஜெட் கூட்டத்தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 9ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 2022-23-ம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட்டை வரிவிதிப்பு நிதிக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் இடம்பெறுகின்ற முக்கியமான திட்டங்களை மேயர் பிரியா அறிவிக்கிறார்.
புதிய நிதியாண்டில் மாநகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள், தற்போது நடைபெற்று வரும் பணிகள், சிங்கார சென்னை திட்டம், மழைக்காலத்தில் சென்னை வெள்ளப் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் அதில் இடம்பெற உள்ளன.
பட்ஜெட் கூட்டத்தை ஒரே நாளில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முழுவதையும் படித்து முடித்த பின்னர் அதன் மீதான விவாதம் அன்றே நடைபெறுகிறது. கூட்டத்தின் இறுதியில் பட்ஜெட்டிற்கான ஒப்புதல் அளிக்கப்படும். பின்னர் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட வேண்டிய பொருள்கள் எடுத்துக் கொள்ளப்படும்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் கலந்து கொள்ளும் முதல் கூட்டம் இது. சென்னை மாநகராட்சி மன்ற தலைவராக ராமலிங்கம், துணைத் தலைவர்களாக காமராஜ் மற்றும் ராஜகோபால், கொறடாவாக நாகராஜன், பொருளாளராக வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் தங்கள் பணிகளை அன்றைய கூட்டத்தில் தொடங்குகிறார்கள்.
No comments
Thank you for your comments