50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கடைகள் வீடுகள் வருவாய் துறையினர் மீட்பு
காஞ்சிபுரம்:
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 50 கோடி மதிப்பிலான 80 கடைகளும் 40 வீடுகளும் மீட்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பெருமளவில் சுங்குவார்சத்திரம் பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது..
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பேருந்து நிறுத்தத்தின் அருகே திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பழமையான செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இதனருகில் சுமார் 3.5 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. இந்த கோயில் குளத்தின் அருகே கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியை சேர்ந்த பலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குளத்தை சுற்றி உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருவதாலும் வீடுகள் மற்றும் கடைகள் வெளியேறும் குப்பைகளை குளத்தில் பொதுமக்கள் கொட்டி வருவதாலும் குளத்தின் நீர் தற்போது பச்சை நிறமாக மாறி முற்றிலும் மாசடைந்துள்ளது. குப்பைகளாக காட்சி அளிக்கும் குளத்து நீரால் தற்போது அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடும் தொற்று நோயும் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். குளத்தை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பல வருடங்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர்.
கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காமல் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என திருமங்கலம் பகுதி பொதுமக்கள் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் அடிப்படையில் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்த வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணியில் கடந்த 2018ம் ஆண்டு ஈடுபட்டனர்.
இதில் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து சுமார் 80 கடைகளும் 40 வீடுகளும் கட்டப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்த அரசுத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் கடந்த இரண்டு வருடங்களாக காலம் தாழ்த்தி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் சைலேந்திரன் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் ஜெயகாந்தன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர்
4 DSP, 11 காவல் ஆய்வாளர்கள் என 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் 5 ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 50 கோடி மதிப்பிலான 80 கடைகளும் 40 வீடுகளும் மீட்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பெருமளவில் சுங்குவார்சத்திரம் பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது..
No comments
Thank you for your comments