26 இருளர் இன மக்கள் இலவச வீட்டு மனை பட்டா
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மையத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.04.2022) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று நபர்களுக்கும், உத்திரமேரூர் வட்டத்தை சார்ந்த மூன்று நபர்களுக்கும், வாலாஜாபாத் வட்டத்தைச் சேர்ந்த மூன்று நபர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், செல்வபெருமாள்நகர் பகுதியைச் சார்ந்த 26 இருளர் இன மக்கள் ஆகியோருக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் 7 பழங்குடியினர் நபர்களுக்கு, பழங்குடியினர் நல வாரிய அட்டைகளும், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஐந்து மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூர்வமான பாதுகாவலர் நியமன சான்றுகள் (legal guardianship certificate) மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரவிச்சந்திரன் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments