Breaking News

மக்கள் நீதி மன்றங்களால் நேரம் வீணாகுதல், பணம் விரயம், அலைச்சல்கள் தடுப்பு...

காஞ்சிபுரம்,மார்ச்.12

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெறும் மக்கள்  நீதி மன்றங்களால் நேரம் வீணாகுதல், பணம் விரயம், அலைச்சல், ஆகியன தடுக்கப்படுகிறது என்று  மக்கள் நீதிமன்றத்தை தொடக்கி வைத்து  மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றத்தை தொடங்கி வைத்து மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ.சந்திரன் பேசியது..

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகளை சிறப்பாக முடிக்க மொத்தம் 11 அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் ஒரே நாளில் 600 வழக்குகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுத்தொகை மொத்தம் ரூ.15 கோடியாக இருக்கும். மக்கள் நீதி மன்றங்களால் நேரம் வீணாகுதல், பணம் விரயம், அலைச்சல், ஆகியன தடுக்கப்படுகிறது. 

இரு தரப்பினரும் சமாதானமாக போவதால் இருவருக்குமே வெற்றி என்ற நிலையை எட்டுகின்றனர்.கடந்த 2007,2008 ஆம் ஆண்டுகளில் தொடங்கிய வழக்குகளையும் மக்கள் நீதிமன்றத்தில் முடிவுக்கு கொண்டு வர இருக்கிறோம். இதன் மதிப்பு மட்டுமே ரூ.10 கோடியாகும்.

விபத்து வழக்குகள்,காசோலை மோசடி வழக்குகள்,தொழிலாளர் நலன் மற்றும் சிறு குற்ற வழக்குகள் ஆகியன உட்பட மொத்தம் 600 வழக்குகளுக்கு தீர்வு காண முடிவு செய்துள்ளோம் என்றும் ஜெ.சந்திரன் பேசினார். 

மக்கள் நீதிமன்ற தொடக்க விழாவிற்கு கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.இளங்கோவன்,முதன்மை சார்பு நீதிபதி மற்றும் சட்டப்பணிகள் குழுவின் தலைவர் பி.திருஞானசம்பந்தம்,தொழிலாளர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அரசு வழக்குரைஞர் பி.கார்த்திகேயன் வரவேற்று பேசினார். 

தொடக்க விழாவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஆர்.ராஜராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் எஸ்.செந்தில்குமார், சரவணன், வழக்குரைஞர் சங்க செயலாளர்கள் ஜான், தி.கார்த்திகேயன் மற்றும் வழக்குரைஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதன்மை நிர்வாக உதவியாளர் சதீஷ்ராஜ் செய்திருந்தார்.

 

No comments

Thank you for your comments