கோவை மாவட்ட செய்திகள்
வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் வழங்கல்
கோவை:
கோவை மகளிர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பெண்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கோவை அண்ணாசிலை சிக்னல் பகுதியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் பெண் போலீசாருடன் இணைந்து கேக் வெட்டி மகளிர் தினம் கொண்டாடினார்.
அதனைத்தொடர்ந்து தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள சூழலில் வெயிலில் நின்று பணிபுரியும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம், நீர் மோர் ,ஆகியவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் உமா, செந்தில்குமார் மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
💐💐💐💐💐
பெண் காவல் அதிகாரிகளுக்கு மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து
கோவை:
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு அரங்கத்தில் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பெண் காவல் அதிகாரிகளுக்கு மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பூங்கொத்து வழங்கி மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுஹாசினிஅவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் அமைத்து தருவதாக கூறினார்.
மேலும், பெண்காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் காண கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.
💐💐💐💐💐
மார்ட்டின் அறக்கட்டளையின்
22ம் ஆண்டு விழா - நலத் திட்டம் வழங்கல்
கோவை:
கோவை மாவட்டம் மார்ட்டின் அறக்கட்டளை 22ம் ஆண்டு விழா மற்றும் உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு சாதனை பெண்களுக்கு விருது மற்றும் நலத் திட்டம் வழங்கும் விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் கிளப்பில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கோவை மேயர் கல்பனா ஆனந்த்குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மார்ட்டின் அறக்கட்டளை நிறுவனர் ரோட்டேரியன் ஏ.கே எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ரோட்டேரியன் சாந்தி சந்திரசேகர், குமரேசன், உதவி ஆளுநர் கணேஷ்குமார், ஜெகநாதன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஆக்ருதி தலைவர் கவிதா கோபாலகிருஷ்ணன், செயலாளர் சப்னா சாஜத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மார்ட்டின் அறக்கட்டளையின் 22 ம் ஆண்டு விழா மற்றும் மகளிர் தின விழாவில் பாளையசக்கரபட்டி அண்ணாமலை மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பழங்குடி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.2 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பில் பேட்டரி கார் வழங்கப்பட்டது. மற்றும் பெஸ்ட் அண்ட் கோ மகளிர் கபடி வீராங்கனைகளுக்கு கல்லூரி கட்டணமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்பட்டது.
மார்ட்டின் பவுண்டேஷன் மூலம் ஹோமியோபதி மெடிக்கல் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி கட்டணமாக ரூ.52 ஆயிரம் வழங்கப்பட்டது. மேலும், பொற்கொள்ளார் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களின் வாழ்வாதாரத்திற்கு தையல் மெஷின் வழங்கப்பட்டது. மகளிர் ஆட்டோ டிரைவர்கள், கார் டிரைவர்கள் , செவிலியர்கள், ஜி.கே.என்.எம் மருத்துவமனை டாக்டர்கள்,நர்சுகள், புலியகுளம் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 101 பேருக்கு சாதனையாளர் விருதுகளை மார்ட்டின் அறக்கட்டளை நிறுவனர் ரோட்டேரியன் ஏ.கே எஸ். டாக்டர் லீமா ரோஸ் மார்ட்டின் வழங்கி கௌரவித்தார்.
💐💐💐💐💐
வழிப்பறி செய்த நபர்களை துரிதமாக பிடித்த மு.நி.காவலர் அழகிரிசாமி
கோவை மாவட்டம், கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தனது மனைவியை பார்ப்பதற்காக மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்(39) என்பவர் கோவில்பாளையத்தியத்தில் உள்ள தனியார் பேங்க் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் சோமசுந்தரத்தை(39) அடித்து கீழே தள்ளி விட்டு அவரிடம் இருந்த கைபேசியை பறித்துச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக சோமசுந்தரம்(39) கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் அப்பகுதியில் ஆல்ஃபா வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மு. நி. காவலர் அழகிரிசாமி என்பவருக்கு காவல் நிலையத்தில் இருந்து தகவல் கொடுத்தனர்.
அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்குள்ள பொதுமக்களிடம் விசாரித்து அவர்கள் கூறிய தகவலை அடிப்படையாகக் கொண்டு துரிதமாக செயல்பட்டு உடனே முதல் நிலை காவலர் காலதாமதமின்றி உடனடியாக வெகுதூரம் சென்றிருக்க முடியாது என யூகித்து சுமார் 1 1/2 கிலோமீட்டர் பின் தொடர்ந்து சென்று செல்போனை பறித்து சென்ற மூன்று நபர்களையும் அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்தும் , நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மு.நி.காவலர் திரு. அழகிரிசாமி (1319) என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . செல்வநாகரத்தினம் இ.கா.ப , மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
💐💐💐💐💐
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக மகளிர் அலுவலர்கள் இன்று (08.03.2022) மரக்கன்றுகளை நட்டுவைத்தார்கள். அருகில் மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர்ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட அலுவலர்கள் உள்ளனர்.
பெண் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு கல்வி பயில வேண்டும்- பள்ளி மாணவிகளிடையே உரையாற்றிய மேயர் கல்பனா ஆனந்தகுமார்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் இன்று (08.03.2022) நேரில் பார்வையிட்டு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளுக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் 19வது வார்டுக்குட்பட்ட மணியகாரம்பாளையம் மாநகராட்சி பள்ளியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் பார்வையிட்டு, சர்வதேச மகளிர் தினத்திற்கு வருகைதந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
மேலும் அவர் பேசியதாவது, “மகளிர் தின விழாவிற்கு வருகை தந்துள்ள மரியாதைக்குரிய மாநகராட்சி ஆணையாளர், கல்வி அலுவலர், நகர்நல அலுவலர், ஆசிரியர்கள், மாணவச்செல்வங்கள், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று, கோயம்புத்தூர் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்வு செய்துள்ளார்கள். அதற்காக, தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், எனக்கு வாக்களித்த பொதுமக்கள் அனைவருக்கும், பள்ளி ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் பெண்களுக்கு கல்வி பயில வாய்ப்பு தந்தார். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெண்களுக்கு சொத்துரிமை தந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தந்தார். இதனால் 50க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கோவையில் பெண்கள் தேர்வு பெற்றுள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆகிய என்னை கோயம்புத்தூர் மாநகராட்சி முதல் பெண் மேயராக தேர்வு செய்துள்ளர்கள். பெண் குழந்தையாக நீங்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும், மாமன்ற உறுப்பினர், மேயர், டாக்டர், ஆசிரியராக உயர் பதவிக்கு வரவேண்டும்.
மேலும் தன்னம்பிக்கையோடு கல்வி பயில வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மீண்டும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என பேசிய பின்னர், மணியகாரன்பாளையம் மாநகராட்சி பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி செல்வி.ச.ஜெ.சபிதா ஸ்ரீ என்ற மாணவி மாநில மற்றும் தேசிய அளவில் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்றுள்ளார். மேலும் அவருடை தங்கை ச.ஜெ.தாரணி அதே பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பில் பயின்று வருகிறார். இவரும் மாநில மற்றும் தேசிய அளவில் சிலம்பம் போட்டிகளில் பங்கேற்று மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கம் வென்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மேயர் அவர்கள், துணை மேயர் அவர்கள், மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், கல்வி அலுவலர் ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.
மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக கிருமிநாசினி, முகக்கவசம், நாப்கின், சோப்பு, நகவெட்டி உள்ளிட்டவைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் 31வது மாமன்ற உறுப்பினர் வைரமுருகன் என்கிற ரா.முருகன் அவர்கள், மாநகர கல்வி அலுவலர் கே.பாண்டிய ராஜ சேகர், மாநகர நகர்நல அலுவலர் மரு.சதீஷ்குமார், வடக்கு மண்டல உதவி ஆணையர் மோகனசுந்தரி, உதவி செயற்பெரியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் தாமஸ் சேவியர், ஆசிரியர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
💐💐💐💐💐
அவசர உதவி அழைப்புக்கு உடனே தீர்வு.... முதலிடம் பிடித்த கோவை மாநகரம் காவல் துறை..
கோவை
கோவை மாவட்டம் அவசர உதவி கோரும் அழைப்புகளுக்கு விரைந்து சென்று தீர்வு காண்பதில், மாநில அளவில் கோவை மாநகர காவல்துறையினர் முதலிடம் பிடித்துள்ளனர்.
சாலை விபத்து, குற்றச்சம்பவங்கள் நேரிடும்போதும், அவசர போலீஸ் உதவி தேவைப்படும் மற்ற நேரங்களிலும், போலீஸ் கட்டுப்பாட்டு அறையை, '100' என்ற கட்டணம் இல்லாத போன் எண்ணில் தொடர்பு கொண்டு, பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தகவல் வந்தவுடன், கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்ட போலீஸ் ரோந்து குழுவினர், உடனடியாக சம்பவ இடத்துக்கு புறப்பட்டு விடுவர். போலீசார் எத்தனை விரைவாக சம்பவ இடத்திற்கு செல்கின்றனர் என்ற விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
மாநில அளவில் சேகரிக்கப்பட்ட இந்த புள்ளி விவர அடிப்படையில், விரைந்து சம்பவயிடம் செல்வதில், கோவை மாநகர போலீசார் முதலிடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
கரூர் போலீஸ் இரண்டாமிடம், துாத்துக்குடி போலீஸ் மூன்றாமிடத்தில் உள்ளனர்.
இதுகுறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் கூறுகையில்,
மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் நுாற்றுக்கணக்கான போன் அழைப்புகள் வருகின்றன.
அவற்றை நேரில் சென்று பிரச்னைகளுக்கு தீர்வு காண, 24 ரோந்து வாகனங்களுடன் போலீஸ் குழுவினர் பணியில் இருப்பர்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து தகவல் வந்தவுடன், ரோந்து குழுவினர் சம்பவ இடம் நோக்கி புறப்படுவர். தற்போது சேகரிக்கப்பட்ட புள்ளி விவரம் அடிப்படையில், போலீஸ் குழுவினர் சென்று சேரும் நேரம் 2 நிமிடம் 59 வினாடியாக உள்ளது.
இதை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன், பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என தெரிவித்தார்.
💐💐💐💐💐
மார்க்சிஸ்ட் புகார் எதிரொலி உதவி கமிஷனர் அதிரடி மாற்றம்...
கோவை :
கோவை சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனர் சுகுமார் சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கோவையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நடந்தபோது சிவானந்தா காலனியில் மக்கள் ஒற்றுமை மேடை என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தி நினைவு நாள் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பில் இடம்பெற்றுள்ள வெவ்வேறு கட்சியினர் அமைப்பினர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
உறுதிமொழியை ராமகிருஷ்ணன் வாசித்துக்கொண்டிருந்த போது அதிலிருந்த சில வாசகங்களை ஆட்சேபித்து போலீசார் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் சார்பில் தமிழக அரசிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக சாய்பாபா காலனி போலீஸ் உதவி கமிஷனர் சுகுமார் எஸ்.டி.எஃப். படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தேனி மாவட்டத்தில் பணியாற்றிய சையத் பாபு புதிய உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் முடிவுக்கு வந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
💐💐💐💐💐
No comments
Thank you for your comments