Breaking News

நெல்லை அருகே பிரபல ரவுடி என்கவுன்ட்டர்

களக்காடு: 

அரிவாளால் போலீஸ்காரரை தாக்கியதையடுத்து, சுதாரித்துக்கொண்ட போலீசார் தற்காப்புக்காக ரவுடி நீராவி முருகனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு கிராமத்தை சேர்ந்தவர் நீராவி முருகன் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், வழிப்பறி என சுமார் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.

நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த இவர் 2019-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த இவர் நெல்லையில் பதுங்கி இருந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த ஒரு கொள்ளை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பதை திண்டுக்கல் தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நீராவி முருகனை திண்டுக்கல் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே பொத்தை பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலைமையிலான தனிப்படையினர் நீராவி முருகனை கைது செய்வதற்காக இன்று நெல்லை வந்தனர்.

காலை 11 மணியளவில் தனிப்படை போலீசார் பொத்தை பகுதியில் பதுங்கி இருந்த நீராவி முருகனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அப்போது நீராவி முருகன் அரிவாளால் ஒரு போலீஸ்காரரை வெட்டினார். அதனை தடுக்க முயன்ற மேலும் 2 போலீஸ்காரர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

இதனால் சுதாரித்து கொண்ட போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் நீராவி முருகனை சுட்டனர். இதில் அவர் மீது குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே நீராவி முருகன் பலியானார்.

தகவல் அறிந்து நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மேலும் காயம் அடைந்த 3 போலீஸ்காரர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் நீராவி முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Thank you for your comments