Breaking News

அரிசி ஆலை மற்றும்‌ நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு ஆய்வு

ஈரோடு, மார்ச் 30-

ஈரோடு மாவட்டம்‌, கங்காபுரம்‌ மற்றும்‌ நசியனூர்‌ ஆகிய பகுதிகளில்‌ அரிசி ஆலை மற்றும்‌ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்பு கிடங்கு ஆகியவற்றினை நிர்வாக இயக்குநர்‌, (தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌) டாக்டர்‌.எஸ்‌.பிரபாகர்‌ ‌ தலைமையில்‌, மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ முன்னிலையில்‌,  உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ சக்கரபாணி  நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌.

இந்த ஆய்வின்போது, உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ சக்கரபாணி அவர்கள்‌, ஈரோடு மாவட்டம்‌, காங்காபுரம்‌ பகுதியில்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ சார்பில்‌ செயல்படும்‌ சேமிப்பு கிடங்கில்‌, நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்படவுள்ள அரிசி, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில்‌ மற்றும்‌ சர்க்கரை ஆகியவை வைக்கப்பட்டுள்ளதை நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்‌. 


தொடர்ந்து, நசியனூர்‌ பகுதியில்‌ செயல்படும்‌ சென்னை கேட்‌ தனியார்‌ அரிசி ஆலையினையும்‌ மற்றும்‌ பெருந்துறை சிப்காட்‌ வளாகத்தில்‌ கட்டப்பட்டு வரும்‌ சென்னை கேட்‌ தனியார்‌ அரிசி ஆலையினையும்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்‌. 

இந்த ஆய்வின்போது,  உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ சக்கரபாணி செய்தியாளர்களிடம்‌ தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வேளாண்‌ விவசாய பெருங்குடி மக்கள்‌ பயன்பெறும்‌ வகையில்‌, பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள்‌. அதனடிப்படையில்‌, விவசாயிகளுக்கு நேரடி கொள்முதல்‌ நிலையத்திலேயே, அவர்கள்‌ கொள்முதல்‌ செய்கின்ற நெல்லை, காத்திருக்காமல்‌ உடனடியாக கொள்முதல்‌ செய்ய வேண்டும்‌, அதேசமயம்‌ மழை காலத்தில்‌ நெல்‌ எங்கும்‌ நனைந்து விடக்கூடாது, விவசாயிகள்‌ இதனால்‌ பாதிப்பு அடையக்கூடாது என்பதற்காக சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்கள்‌.

ஏற்கனவே, இது தொடர்பாக, ஜூலை மாதம்‌ கூட்டுறவுத்துறை அமைச்சர்‌,  வேளாண்மை & உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆகியோருடன்‌ தலைமைச்‌ செயலாளர்‌ தலைமையில்‌, துறை செயலாளர்கள்‌ ஆகியோர்‌ அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்களுடன்‌ காணொலி காட்சி வாயிலாக கூட்டம்‌ நடத்தி, தமிழகத்திலே உள்ள நேரடி கொள்முதல்‌ நிலையத்தில் விவசாயிகள்‌ கொண்டு வந்த நெல்லை கொள்முதல்‌ செய்த உடனே, அதை சேதம்‌ ஏதும்‌ ஏற்படாமல்‌ பாதுகாப்பான இடத்தில்‌ வைக்க வேண்டும்‌ என்று  தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அறிவுரை வழங்கியுள்ளார்கள்‌.

அதனடிப்படையில்‌ உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்துறை சிறப்பான முறையில்‌ செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டு சுமார்‌ 45.00 இலட்சம்‌ மெட்ரிக்‌ டன்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுமார்‌ இதுவரை 28,70,317 மெட்ரிக்‌ டன்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில்‌ 1507 நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ உள்ளது. இதன்‌ மூலம்‌ சுமார்‌ 4,17,527 விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. விவசாயிகள்‌ உற்பத்தி செய்த நெல்லுக்கு கொடுக்கின்ற தொகை ரூ.5608 கோடி ஆகும்‌.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 54 நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்கள்‌ செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இதில்‌ 57,170 மெட்ரிக்‌ டன்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டுள்ளது. அதோடு ரூ.119.00 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில்‌ 10,781 விவசாயிகள்‌ பயனடைந்துள்ளனர்‌. 

விவசாயிகள்‌ நேரடி கொள்முதல்‌ நிலையங்கள்‌ தொடர்பாக புகார்களுக்கு உடனடியாக தொடர்பு கொள்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகத்தின்‌ மூலமாக அந்த அலுவலகத்தில்‌ முதலமைச்சர்‌ அவர்களின்‌ அறிவுரைக்கிணங்க கட்டணமில்லா அழைப்பு (Toll Free No  1800 599 3540)  எண்‌ பயனபாட்டிற்கு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள்‌, பொதுமக்கள்‌ உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம்‌. 

தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும்‌ ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்‌. மேலும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஆட்சி பொறுப்பேற்றவுடன்‌, புதியதாக குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம்‌ அளித்த தகுதியானவர்களுக்கு 15 நாட்களில்‌ குடும்ப அட்டைகள்‌ வழங்கும்‌ வகையில்‌, தற்போது வரை சுமார்‌, 11 இலட்சம்‌ நபர்களுக்கு குடும்ப அட்டைகள்‌ வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்‌.

முன்னதாக, கங்காபுரம்‌ சித்தோடு உழவர்பணி கூட்டுறவு சங்கம்‌ சார்பில்‌ செயல்படும்‌ நியாய விலைக்கடையினை நேரில்‌ சென்று திடீர்‌ ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும்‌ நியாய விலைப்பொருட்களை பார்வையிட்டார்‌.

இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாநகராட்சி  துணை மேயர்‌ வே.செல்வராஜ்‌, மண்டல மேலாளர்‌ (தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌) முருகேசன்‌, துணை மேலாளர்‌ (தரக்கட்டுபாடு) சக்தி, மாவட்ட வழங்கல்‌ அலுவலர்‌ இலாஹிஜான்‌, வட்டாட்சியர்கள்‌ பாலசுப்பிரமணி (ஈரோடு), கார்த்திகேயன்‌ (பெருந்துறை), ஜெய்குமார்‌ (பறக்கும்படை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

No comments

Thank you for your comments