Breaking News

அறியாமையா? அக்கறையின்மையா? விளம்பர எண்ணமா? - வானதி சீனிவாசனுக்கு கேள்வி எழுப்பிய எம்பி நடராஜன்

கோவை, மார்ச் 10-

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மார்ச் 8ம் தேதி கோரிக்கை மனு அளித்தார்.  அந்த மனு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனன், அறியாமையா... அக்கறையின்மையா... விளம்பர எண்ணமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன்

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜனன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி  உறுப்பினருமான வானதி சீனிவாசன் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்து இருப்பதாக பத்திரிகை செய்தி  ஊடகங்களில் வெளிவந்துள்ளது. 

அதில் ரயில்வே அமைச்சரிடம் கொடுத்துள்ள மனுவின் சாரம்சங்களை தெரிவித்து இருந்தார். அதில் கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும் அல்லது பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோவையை பிரித்து சேலம் கோட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை  வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பாலக்காடு கோட்டத்தில் இருந்து கோயமுத்தூர் தனியாக பிரிக்கப்பட்டு சேலம் கோட்டத்தில் கடந்த 2006ம் ஆண்டே இணைக்கப்பட்டு விட்டது. (16 ஆண்டுகளுக்கு முன்பு) இதற்க்காக பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாகவே, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த லாலுபிரசாத் யாதவ் சேலம் கோட்டத்தை உருவாக்கினார். பொள்ளாச்சி, கிணத்துகடவு போன்ற ஊர்கள் மட்டுமே இன்னமும் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இருக்கின்றது. இவற்றையும் சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என 2007 முதல் அனைத்து கட்சிகளும் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து போராடி வருகிறோம்.

உண்மை நிலவரம் இப்படி இருக்க பாலக்காடு ரயில்வே கோட்டத்தில் இருந்து கோவையை பிரிக்க வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதிசீனிவாசன், மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்வை  சந்தித்து மனு அளித்து வந்திருப்பது அவரது அறியாமையை காட்டுகின்றது. 

சேலம் ரயில்வே கோட்டம் அமைந்த பின்னும் 45 சதவீத வருவாயினை கொடுக்கும் கோயமுத்தூர் ரயில் நிலையத்திற்கு உரிய கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட வில்லை என்பதால் கோவையை தனி ரயில்வே கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுத்துள்ளது. 

ஆனால் பிரச்சினை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளாமலும்,  இது குறுத்து அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முயற்சிக்காமலும் அரைகுறை தகவல்களோடு, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளித்து வந்திருப்பது மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் அமையாது. 

கோவை மாவட்டத்திற்கும் எந்த வகையிலும் பயணளிக்காது. பா.ஜ.கவில் தேசிய பொறுப்பு, கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் போன்ற பொறுப்புகளுடன் இருப்பவர் மக்கள் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போது கூடுதல் பொறுப்புடன் இருப்பது அவசியம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments