அண்ணா கலையரங்கம் தியேட்டர் பல்நோக்கு அரங்கமாக மாறுகிறது
வேலூர், மார்ச் 30-
வேலூரில் ஏழைகளின் சினிமா தியேட்டரான அண்ணா கலையரங்கம் பல்நோக்கு அரங்கமாக மாறுகிறது.
வேலூர் மாநகரின் பிரதான சாலையாக உள்ள அண்ணா சாலையில் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு கடந்த 1968ம் ஆண்டு 26,838 சதுரடி பரப்பளவு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்தில் கடந்த 1969ம் ஆண்டு சிறுவர் அரங்கம் திறக்கப்பட்டது. பின்னர், 22,152 சதுரடி பரப்பளவு கொண்ட கட்டிடத்துடன் அண்ணா கலையரங்கம் என பெயர் மாற்றப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியால் 1971ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருந்த அண்ணா கலையரங்கம் மேம்படுத்தப்பட்டு 1978ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் தினசரி 3 காட்சிகள் வீதம் முழு நீள திரைப்படங்கள் வெளியிட தொடங்கப்பட்டது.
இதற்காக பால்கனி, முதல் வகுப்பு, 2ம் வகுப்பு, 3ம் வகுப்பு என சுமார் 680 இருக்கைகள் கொண்டதாக மாற்றப்பட்டது. நகரின் மத்தியில் குறைந்த கட்டணத்தில் திரைப்படங்களை சாமானிய மக்கள் கண்டு ரசித்தனர். புத்தம் புதிய திரைப் படங்கள் இல்லாவிட்டாலும் இரண்டாம் வெளியீடு திரைப்படங்கள் வெளியிடப்பட்டு கணிசமான வருவாய் ஈட்டியது. அத்துடன் 10 ஆண்டு களுக்கு முன்பு வரை பல்வேறு அரசு விழாக்கள் அண்ணா கலையரங்கில் நடத்தப்பட்டு அதன் மூலமும் வருவாய் கிடைத்தது. ஆனால், போதிய அளவில் வருவாய் இல்லை என்ற காரணத்தை கூறி கடந்த 10 ஆண்டுகளாக அண்ணா கலையரங்கம் மூடியே உள்ளது.
அண்ணா கலையரங்கில் பல்வேறு நிலை பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 18 பேரும் தற்போது வரை செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் அயல் பணியாக பணியாற்றி வருகின்றனர். பரப்பான சாலையில் இயங்கிய அண்ணா கலையரங்கம் மூடியே இருப்பதால் இருக்கைகள் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
அண்ணா சாலையில் அண்ணாவின் பெயரால் இயங்கிய அண்ணா கலையரங்கம் இன்று அடையாளம் இழந்து காணப்படுகிறது. சகல வசதிகளுடன் இருக்கும் அண்ணா கலையரங்கை மீண்டும் புதுப்பித்தால் திரைப் படங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தவும் வசதியாக இருக்கும் என வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அண்ணா கலை அரங்கத்தினை புதுப்பித்து பல்நோக்கு அரங்கமாகவும், வணிக வளாகம், சுற்றுப்புற அங்காடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் மற்றும் அரசு துணை செயலாளர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னருடைய சமாதியான முத்து மண்டபத்தின் சுவற்றிற்கு வண்ணம் பூசிடவும், கழிப்பிட வசதி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
No comments
Thank you for your comments