Breaking News

புரோகிதராக சீர்திருத்த திருமணம் செய்து வைக்கும் தனக்கு அதிக கிராக்கி - அரங்கத்தை அதிரவைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை:

இந்த நாட்டில் வைதிக திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு கிராக்கி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் சீர்திருத்த திருமணம் செய்து வைக்கும் தனக்கு அதிக கிராக்கி இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் தன்னை சீர்திருத்த திருமணம் செய்துவைக்கும் புரோகிதர் என குறிப்பிட்டு அவர் பேசி அரங்கத்தை அதிரவைத்தார். அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் அத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது. குறிப்பாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், தமிழில் அர்ச்சனை போன்ற திட்டங்கள் திமுகவின் கொள்கை திட்டங்கள் ஆகும். இதேபோல் மேடைதோறும் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்.  சீர்த்திருத்த திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். 

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் திமுக பொதுக்குழு உறுப்பினர் நாராயணனின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில் முதலமைச்சர் ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மேடையில் உரையாற்றினார். 

அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, 

நீண்ட காலமாக கழகத்திற்கு பணியாற்ற கூடியவர்தான் புழல் நாராயணன். இதுபோன்ற தொண்டர்களால் தான் இந்த கழகம் தலைநிமிர்ந்து நிற்கிறது, தொண்டர்கள் இல்லை என்று சொன்னால் நான் இல்லை,  சுயமரியாதையோடு திராவிட உணர்வோடு திமுகவின் பணி தொடர்ந்து வருகிறது என்றார். 

உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை நாம் சந்தித்திராத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம், இதுவரையில் நாமே இந்த வெற்றியை பார்த்ததில்லை, அப்படிப்பட்ட வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். இந்த வெற்றியை மனதில் வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் அவரவர் தங்கள் கடமை ஆற்ற வேண்டும் என கூறினார். 

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து மக்களுக்கான பணியை ஆற்றி வருகிறோம் என்றார். கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் தான் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி இருந்தார்கள். தற்போது நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் திமுக காரன் ஓடி வருவான் என்று மக்கள் நம்பியிருப்பதால்தான் நமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றார். எனவே அதை உணர்ந்து கழகத்தினர் நடந்து கொள்ள வேண்டும் என்றார். 

அதே போல் இந்த நாட்டில் வைதீக திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு கிராக்கி இருக்கிறதோ இல்லையோ. ஆனால் சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைக்கும் இந்த புரோகிதருக்கு கிராக்கி அதிகம் ஏற்பட்டு இருக்கிறது என்றார். மேலும் மணமக்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் பெயரை சூட்டுங்கள். தமிழ் நாட்டுக்கு பெருமை சேருங்கள். தமிழர் என்ற உணர்வை பெருங்கள் என அவர் கூறினார். 

No comments

Thank you for your comments