நாகாவதி அணை அருகே 5 தலைமுறையாக வசித்து வரும் இடத்தை அப்புறப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும்
தருமபுரி, மார்ச் 8-
தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே 5 தலைமுறையாக வசித்து வரும் இடத்தை அப்புறப்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் என பொதுமக்கள் வலியுத்தினர்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த நாகாவதி அணை அருகே உள்ள எர்ரபட்டி பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் நேற்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, நல்லம்பள்ளி அடுத்த நாகாவதி அணை பகுதியில் உள்ள எர்ரபட்டி கிராமத்தில் 10-க்கு மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 5 தலைமுறையாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் பகுதி புறம்போக்கு பகுதியாக உள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் 80 ஆண்டு காலமாக ஐந்து தலைமுறையாக வசித்து வருகிறோம். மேலும் ஒரு ஏக்கர் நிலத்தில் பாரம்பரியமாக விவசாயம் செய்து வீடு கட்டி அரசு மின் இணைப்பு பெற்று குடியிருந்து வருகிறோம்.
இந்த நிலையில் நாங்கள் குடியிருக்கும் இடத்தை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் நில அளவையர் ஆகியோர் எங்களுடைய நிலத்தை ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு வீடு கட்டி தருவதற்காக அளவீடு செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.
இந்த நிலத்தை தவிர எங்கள் வாழ்வாதாரத்திற்கு வேறு இடங்கள் எதுவும் இல்லை. அதனால் மன உளைச் சலுக்கு ஆளாகி உள்ளோம்.ஊர் பொது மக்களாகிய எங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments