ரூ.4755 கோடி முதலீடு... 33 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து...
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள “சர்வதேச அறைகலன் பூங்கா” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரூ.4755 கோடி முதலீடு மற்றும் 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திடும் வகையில் 33 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.3.2022) தூத்துக்குடியில் 1156 ஏக்கர் நிலப்பரப்பில், அமைக்கப்படவுள்ள சர்வதேச அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
சர்வதேச அறைகலன் பூங்கா
நாட்டிலேயே முதலாகவும், உலகத்தரத்திற்கு இணையாகவும் சர்வதேச அறைகலன் பூங்காவை உருவாக்கிட அரசு திட்டமிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீளவட்டான் மற்றும் தெற்கு வீரபாண்டியபுரம் கிராமங்களில் உள்ள 1156 ஏக்கர் நிலப்பரப்பில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலையையொட்டி இந்த சர்வதேச அறைகலன் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
70 - 80% மூலப்பொருள் தேவையை பூர்த்தி செய்திடும் வகையில் ஒரு சிறப்பான சூழல் அமைப்பை உருவாக்கி, உற்பத்தி செலவினங்களைப் பெருமளவு குறைத்து, அறைகலன் துறையில், தமிழ்நாட்டின் போட்டித் தன்மையை அதிகரிக்கும் வகையில், இந்த சர்வதேச அறைகலன் பூங்கா விளங்கும்.
மேலும், முழுக்க முழுக்க சூரிய மின்சக்தி உற்பத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இணக்கத்தை உறுதி செய்தல், கழிவு சேகரிப்பு மற்றும் வெளியேற்றங்களுக்கான சுத்திகரிப்பு வசதி ஆகியவற்றிற்கான சிறப்பு வசதிகளுடன் பசுமை சார்ந்த மாதிரி கருத்துருக்களுடன் இப்பூங்கா அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.
இத்திட்டத்தின் முதற்கட்டம் 4 முதல் 5 ஆண்டுகளில் முழுமையாகச் செயல்படும் தருணத்தில் 1500 முதல் 1800 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் மற்றும் 1.1 முதல் 1.5 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகவும் வாய்ப்புள்ளது.
இப்பூங்காவின் இரண்டாம் கட்டம் 8 முதல் 10 ஆண்டுகளில் முழுமையகச் செயல்படும் தருணத்தில் 3500 முதல் 4500 கோடி ரூபாய் அளவிற்கான முதலீடுகள் மற்றும் 3 இலட்சம் முதல் 3.50 இலட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகவும் வாய்ப்புள்ளது.
சர்வதேச அறைகலன் பூங்காவில் அமையவுள்ள திட்டங்களுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பம் மற்றும் 2 நிறுவனங்களுக்கு சர்வதேச அறைகலன் பூங்காவில் நில ஒதுக்கீடு ஆணைகள்
இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இந்த சர்வதேச அறைகலன் பூங்காவில், திட்டங்களை அமைப்பதற்கு முன்வந்துள்ள 8 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
மரச்சாமான் மற்றும் தோல் பொருட்களால் அறைகலன் பொருட்களை உற்பத்தி செய்யவுள்ள இந்த 8 திட்டங்கள் மூலம் 2,845 கோடி ரூபாய் முதலீடும், 11,450 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
வ.எண்-நிறுவனத்தின் பெயர்-உற்பத்திப் பொருள்
1.Hettich India Pvt Ltd - அறைகலன்கள்
2.Deceuninck Profiles - ஜன்னல் மற்றும் கதவுகள்
3. Manor & Mews - அறைகலன்
4. New Century Sofa India - தோல் அறைகலன்கள்
5. Vikas Exports - மரச்சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்
6. Dileep Industries Ind - மரச்சாமான்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்
7. Marque impex - அறைகலன்
8. Borotik - அறைகலன்
மேலும், இந்நிகழ்வின்போது, சர்வதேச அறைகலன் பூங்காவில், தனது உற்பத்தித் திட்டங்களை நிறுவ முன்வந்துள்ள M/s. Hettich India Private Limited மற்றும் M/s. Deceuninck Profiles India Private Limited ஆகிய 2 நிறுவனங்களுக்கு நில ஒதுக்கீடு ஆணைகளை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தொழில் துறை சார்பாக இதர புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தொழில் துறை சார்பில், 1,643 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 3,653 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள் உற்பத்தி மற்றும் உரங்கள் / இரசாயனங்கள் உற்பத்தி போன்ற துறைகளில் தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இந்நிறுவனங்கள் அமையவுள்ளன.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
வ.எண் / நிறுவனத்தின் பெயர் / உற்பத்திப் பொருள் / இடம்
1.LS Mills - ஜவுளி - தேனி, திண்டுக்கல் விருதுநகர் மற்றும் திருப்பூர்
2.Rajapalayam Mills - ஜவுளி - விருதுநகர்
3.Fishin’ India -கடல் உணவுகள் பதப்படுத்துதல் - கங்கைகொண்டான், திருநெல்வேலி
4.Silverline Industries - உரம் மற்றும் சல்பூரிக் அமிலம் - தூத்துக்குடி மற்றும் சென்னை
5.Kartya Textiles - ஜவுளி - விருதுநகர்
6.Kasim Textiles Mills - ஜவுளி - விருதுநகர்
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பாக 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 267 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2,373 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 19 நிறுவனங்களுடன் முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டது.
இந்த முதலீடுகள், கட்டுமானம், உணவுப் பதப்படுத்துதல், கண்ணாடி உற்பத்தி, ஆடைகள் மற்றும் ஜவுளி, சூரிய ஒளி அடுப்புகள், அறைகலன், உரங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகிய துறைகளில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதன் விவரங்கள் பின்வருமாறு:-
வ.எண் நிறுவனத்தின் பெயர் உற்பத்திப் பொருள் இடம்
1. M/s. Sakthi Fly Ash Bricks - ஃப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தி - தூத்துக்குடி
2. M/s. Viva Frozen Foods - மீன் பதப்படுத்துதல்
3. M/s. Shaleo Marine Foods - மீன் பதப்படுத்துதல் மற்றும் பனிக்கட்டி ஆலை
4. M/s. Santhanam Packaging (P) Ltd - நெய்த பைகள் உற்பத்தி
5. M/s. VAINI Fly Ash Brick & Block Manufacturers - ஃப்ளை ஆஷ் செங்கல் மற்றும் பேவர் பிளாக்ஸ்
6. M/s. Vinayaga Glass Industries - கண்ணாடி உற்பத்தி - திருநெல்வேலி
7. M/s. Jayam Marine (P) Ltd - இறால் மற்றும் மீன் எண்ணெய் உற்பத்தி மற்றும் மீன் உணவு
8. M/s. Aditi Infrastructure Developers - அனைத்து கட்டுமானப் பொருட்கள்
9. M/s Sivasakthi paper and boards - அட்டைப் பலகைகள் - விருதுநகர்
10. M/s. Jayskay Group of Company - மருத்துவப் பொருட்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுக் கருவிகள்
11. M/s. Dharmarathina Textile Private Limited - பருத்தியிலிருந்து நூல் உற்பத்தி
12. M/s. Kathiravan Solar Project - சூரிய ஒளி குக்கர்கள் மற்றும் சூரிய ஒளி அடுப்புகள் - இராமநாதபுரம்
13. M/s. Ergoline India Pvt Ltd - மரச்சாமான்கள் உற்பத்தி - மதுரை
14. M/s. Lalitha Devi Mordern Rice Mill - அரிசி தவிடு எண்ணெய் உற்பத்தி
15. M/s. Sathyam Biotech - உயிரியல் உரங்கள்
16. M/s. Sri Desikanathar Textiles (P) LTD - ஜவுளி நெசவு - திண்டுக்கல்
17. M/s Latrile Gloves (P) LTD - மருத்துவக் கையுறைகள்
18. M/S DeltaStar Power Projects Services Pvt Ltd - சூரிய ஒளி, LED, சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவ சாதனங்கள்
19. M/s. Victus Apparel (P) Ltd - ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் - சிவகங்கை
ஆக மொத்தம், மேற்கண்ட 33 திட்டங்களின் வாயிலாக 4755 கோடி ரூபாய் முதலீடும், 17,476 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணையதளம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வழிகாட்டி நிறுவனத்தின் புதிய இணையதளத்தைத் https://investingintamilnadu.com/DIGIGOV/index.jsp (www.investingintamilnadu.com) துவக்கி வைத்தார்.
இதில் தற்போது வளர்ந்து வரும் துறைகள் உட்பட அனைத்துத் துறைகள் பற்றிய முழு விவரங்கள், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்குத் தேவையான அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் நடைமுறைகள் போன்ற விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட இந்த இணையதளமானது, முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் சார்ந்த ஐயங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நிலத் தகவல் இணையதளம்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு நிலத் தகவல் இணையத்தை https://tnswp.com/TNLIP/ (www.tnlip.com) துவக்கி வைத்தார்.
இந்த இணையதளம், தொழில் புரியத் தேவைப்படும் நிலங்களை விற்பவர்களையும், அந்நிலங்களை வாங்குபவர்களையும் இணைத்திடும் ஒரு தளமாக விளங்கும்.
பெரிய அளவில் நிலம் வைத்திருப்போர், அவர்களது நிலங்களை, இவ்விணையத்தில் பட்டியலிட்டுக் கொள்ளலாம். அவ்வாறே, நிலம் வாங்குவோரும், தங்களின் தொழில் தேவைகளுக்கேற்ற பொருத்தமான நிலங்களைப் பார்வையிடவும், விற்பனையாளர்களுடனும் தொடர்பு கொள்ளவும் இயலும். இந்நிலத் தொகுப்புகளின் நம்பகத்தன்மையை சரிபார்த்திடவும், இந்த இணைத்தில் பதிவு செய்யப்பட்ட சட்ட ஆலோசகர்கள் மூலம் சட்ட ஆலோசனைகளை பெற்றிடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சி.சண்முகய்யா, வி. மார்க்கண்டையன், ஊர்வசி எஸ். அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் செயல் துணைத் தலைவர் பூஜா குல்கர்ணி, இ.ஆ.ப., தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மரு. கே. செந்தில் ராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குநர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத்துறையின் SCALE Committee தலைவர் பவன் கோயங்கா, ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments