Breaking News

3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள்

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில்  வேளாண்மை செழிக்கவும், வேளாண் உற்பத்தி பெருகவும், விவசாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வாழ்வில் வளம் பெறவும் விவசாயிகளுக்கு “ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள்” வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளதாவது, 

தமிழ்நாடு அரசால் எரிசக்தி துறையின் 2021-2022 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் மாநிலத்தின் விவசாய உற்பத்தியினை பெருக்கி, விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதன்படி, தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக இதுவரையிலும் இல்லாத அதிகபட்ச அளவாக இந்த ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம், மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவற்றின் சார்பில் ஒரு இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

விவசாயிகளுக்கு ஒரு லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் தலைமுறை தலைமுறைக்கும் பயனுள்ள திட்டமாக விளங்கும் திட்டமாகும். இதில் குறிப்பாக, உழவர்கள் பயன்பெறுவதால், விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து தரப் போகிற மகத்தான திட்டம் தான் இத்திட்டம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 23.9.2021 அன்று சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகளுக்கான ஆணைகளை வழங்கி துவக்கி வைத்ததை தொடர்ந்து, இத்திட்டம் தருமபுரி மாவட்டத்தில் விரைவாக செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தகுதியான விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விவசாய மின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின் இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது.  சுயநிதி பிரிவில் மின் இணைப்பு பெற ரூ.10,000/-,   ரூ.25,000/-, ரூ.50,000/- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. 

சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி  பதிவு செய்த பிறகும் மின் இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  இதில், 5 குதிரைத்திறன் உள்ள மின் மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 இலட்சம், 7.50 குதிரைத்திறனுக்கு  ரூ.2.75 இலட்சம், 10 குதிரைத்திறனுக்கு  ரூ.3 இலட்சம், 15 குதிரைத்திறனுக்கு  ரூ.4 இலட்சம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.  

தருமபுரி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தருமபுரி மின் பகிர்மான வட்டம் தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண் / கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு 6,374 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, தருமபுரி மாவட்டத்தில்  வேளாண்மை செழிக்கவும், வேளாண் உற்பத்தி பெருகவும், விவசாயிகள் மின் மோட்டார் மூலம் விவசாயம் செய்து வாழ்வில் வளம் பெறவும் விவசாயிகளுக்கு “ஒரு இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள்” வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 3,662 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.திவ்யதர்சினி  தெரிவித்துள்ளார்.

 

No comments

Thank you for your comments