ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்நல மையம்-மேயர் கல்பனா அறிவிப்பு
கோவை, மார்ச் 8-
ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்நல மையம் உருவாக்கப்படும். முதல் பொது நிகழ்ச்சியில் மேயர் கல்பனா அறிவித்துள்ளார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் நடந்த மாநகராட்சிக்குட்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோவை மேயர் கல்பனா 25 லட்சத்தில் நகர் நல மையம் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
கோவை மாநகராட்சி சார்பில், 'மக்களை தேடி' மருத்துவ முகாம் காளப்பட்டி மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் துவங்கியது. துவக்க நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
மாநகராட்சி மேயர் கல்பனா பேசுகையில், ''கோவை மாநகராட்சி நகர்நல மையம் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. 63 இடங்களில் அமைக்க 15.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ முகாமில் குழந்தைகள் எலும்பு முறிவு, பொது மருத்துவம் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. கோவை மாநகராட்சியில் 4 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்," என்றார். மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற பின், மேயர் கல்பனா பங்கேற்ற முதல் அரசு நிகழ்ச்சி இது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற மேயர் கல்பனா, மாநகராட்சி அதிகாரிகள் எழுதிக்கொடுத்த உரையை வாசித்தார். அவராக வேறு எதுவும் பேசவில்லை. நிகழ்ச்சி முடிந்ததும் கர்ப்பிணிகளுக்கு இலவச மருத்துவ, சத்துணவு பொருட்களை வழங்கினார். பின், மாநகராட்சிப் பள்ளிகளின் கழிப்பறைகளை சென்று பார்த்தார்.
நிகழ்ச்சிக்கு மேயர் அரை மணி நேரம் தாமதமாக வந்தார்; ஒரு மணி நேரத்தில் நிகழ்ச்சியை முடித்து விட்டுக் கிளம்பினார். காளப்பட்டி பகுதியை சேர்ந்த கவுன்சிலர்கள் ஐந்து பேர் பங்கேற்றனர். மேற்கு மண்டல தி.மு.க., பொறுப்பாளரான பையா கிருஷ்ணன், நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
No comments
Thank you for your comments