Breaking News

வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

புதுடெல்லி:

"மக்கள் தொகை அடிப்படையில் சாதி ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், அதற்கான சரியான, நியாயமான காரணங்களைக் கூற வேண்டும்" என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுபோன்ற காரணங்கள் கூறப்படாததால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 

10.5  சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம்

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது  2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி அன்று கல்வி, அரசு வேலை வாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினருக்கான 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5  சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் அந்த சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது.

அதன்பின் இது தொடர்பான அரசாணை திமுக ஆட்சியில் வெளியிடப்பட்டது.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு

இந்நிலையில், இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில்  10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இட ஒதுக்கீடு ரத்து

அந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ''சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பினர்.

''சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது'' கடந்த ஆண்டு நவம்பர் 1ம் தேதி எனத் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, பாமக சார்பிலும், இடஒதுக்கீட்டை எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரித்தது. ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தது. இது தொடர்பாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

அதன் பிறகு வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. 

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனுசிங்வி, ராகேஷ் துவிவேதி, பி.வில்சன், முகுல்ரோத்தகி, மனுதாரர் சி.ஆர்.ராஜன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், பாமக தரப்பில் மூத்த வழக்கறிஞர் எம்.என்.ராவ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

எதிர்மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ராஜீவ் தவண், எஸ்.நாகமுத்து, ஆர்.பாலசுப்ரமணியன், கே.எம்.விஜயன், வி.பிரகாஷ் உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

இருதரப்பு வாதங்கள் முடிவடைந்தது. இந்நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஒத்தி வைத்திருந்தது. மேலும், வழக்கில் தொடர்புடைய தரப்பினரிடம் எழுத்துப்பூர்வ ஆவணங்கள் ஏதும் இருந்தால், 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற  நீதிபதிகள் பி.ஆர்.கவாய், எல்.நாகேஸ்வரராவ் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு அளித்தனர். 

இட ஒதுக்கீடு ரத்து செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தீர்ப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, "1994-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை மீறும் வகையில், உள் இடஒதுக்கீடு கொடுக்கும்போது விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டும். மக்கள் தொகை ரீதியிலான சாதிய உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால், அவ்வாறு இடஒதுக்கீடு வழங்கும்போது அதற்கு சரியான, நியாயமான காரணங்களை மாநில அரசுகள் கூற வேண்டும்.

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் அதற்கான சரியான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை. எனவே இதன் காரணமாக உள் இடஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற கிளை வழங்கிய தீர்ப்பை உறுதி செய்கிறோம்" எனத் தீர்ப்பளித்தனர்.


கல்வி, அரசு வேலை வாய்ப்புகளில் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு தந்தது செல்லாது. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருந்தனர்.

தீர்ப்பு குறித்து தமிழக அரசின் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் கூறுகையில்:

உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த அந்த தீர்ப்பின் அத்தனை விஷயங்களையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவில்லை. மாநில அரசுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொள்ளவில்லை. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதை வாங்காமல் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. அதையும் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு ஒப்புதல் பெற அவசியமில்லை என்று கூறியுள்ளது.

உள் இட ஒதுக்கீடு, ஏற்கெனவே எம்பிசிக்கு 20 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என கூறப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளாத உச்ச நீதிமன்றம், மாநில அரசுக்கு அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளது என்று கூறியுள்ளது.

நீதிபதி தணிகாசலம் அளித்த அறிக்கையின் அடிப்படையில்தான் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். அதில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் கொடுக்க பரிந்துரைத்திருந்தார். இந்த அறிக்கை ஜனார்த்தனம் கமிஷன் அறிக்கையை பார்க்காமல், நீதிபதி தணிகாசலம் அறிக்கை தந்துள்ளார். எனவே இதுபோன்ற உள் இட ஒதுக்கீடு நிலைக்கத்தக்கதல்ல. இது அரசியல் சட்டப்பிரிவு 14-க்கு விரோதமானது எனக்கூறி ரத்து செய்துள்ளனர்" என்று கூறினார்.

தீர்ப்பு குறித்து பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, 

இதை சமூக நீதிக்கு எதிராக தீர்ப்பாக பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், "வன்னியர்களின் சமூக பின் தங்கிய நிலையை நிரூபிக்கும் விதமான தரவுகள் இல்லை என இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்து. இது ஒரு தொடக்கம்தான். தமிழக அரசு உடனடியாக புள்ளி விவரங்களை சேகரித்து இதை தமிழக சட்டமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட வேண்டும்." என்றார்.






No comments

Thank you for your comments