Breaking News

விரைவில் தலைவர்கள் தேர்தல் பிரசாரம்.... நிகழ்ச்சி ஏற்பாடு தீவிரம்... களைகட்டும் தேர்தல் களம்...

சென்னை:   

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடித்ததும் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. களைகட்டுகிறது தேர்தல் களம்...

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது.  தேர்தலை சந்திக்க திமுக, அ.திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி விட்டன. 

இதில் ஆளும் திமுக கட்சி தனது கூட்டணி கட்சிகளுடன் வார்டுகளை பங்கீட்டு கொண்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது.  காங்கிரஸ், பாரதிய ஜனதா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் வேட்பாளர் பட்டியலை தயார் செய்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வருகிற 4ம்தேதி கடைசி நாள் என்பதால் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு முடித்ததும் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

தற்போது கொரோனா பெருந்தொற்று பரவும் காலமாக உள்ளதால் மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வீடு வீடாக சென்று ஓட்டு கேட்க வேண்டுமானால் 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

இதே போல் பிரசார கூட்டம் நடத்த வேண்டுமானால் கூட்ட அரங்கில் 100 பேருக்கு அதிகமாக கூட்டம் இருக்க கூடாது. அதற்கு உட்பட்டு கூட்டம் நடத்தி பேசலாம் என தேர்தல் கமி‌ஷன் நிபந்தனை விதித்துள்ளது. அதே போல் ஜீப்பில் 3 பேர் சென்று ஓட்டு கேட்கலாம். அந்த வாகனங்களுடன் 3 வாகனம் செல்லலாம் என தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

திமுக தலைவரான முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்று வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவதற்கு நிகழ்ச்சி நிரல் தயாராகி வருகிறது.

ஒவ்வொரு ஊரிலும் 100 பேருக்கு மிகாத கூட்ட அரங்கில் வேட்பாளர்களை அமர வைத்து அவர்களை அறிமுகம் செய்து வைத்து அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி ஓட்டு கேட்க உள்ளார். அவரது பிரசாரத்தை காணொலி வாயிலாக மக்கள் பார்ப்பதற்கு வசதியாக கட்சியின் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் 4 நாட்கள் இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாராகி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதே போல் அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், சென்னை, மதுரை, கோவை, சேலம், தர்மபுரி உள்ளிட்ட நகரங்களில் முதற்கட்டமாக பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி வருகிற 3ம்தேதி சென்னையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுவதற்கும் கட்சியில் ஏற்பாடு நடந்து வருகிறது. 

6ம் தேதி மதுரையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க செல்வதால் அன்றைய தினம் அங்குள்ள மாநகராட்சி வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திலும் பங்கேற்று பேசுவார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். பொதுக்கூட்டங்கள் நடத்த கூடாது என்பதால் உள் அரங்கில் 100 பேருக்கு மிகாமல் கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகளை அமர வைத்து பேசுவார் என தெரிகிறது. இதே போல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் முக்கிய நகரங்களுக்கு சென்று தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுவதற்கு விரிவான சுற்றுப்பயண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டு முடித்த பிறகு கட்சித் தலைவர்கள் எந்தெந்த ஊர்களில் எங்கெங்கு பேச உள்ளனர் என்பது தெரிய வரும்.

No comments

Thank you for your comments