Breaking News

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

சென்னை:

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிவடைந்து நேற்று அந்த மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நாளை (திங்கட்கிழமை) பிரசாரத்தை தொடங்குகிறார்.

சிவகாசி கம்மவார் மண்டபத்தில் நாளை காலை அவர் அதிமுக. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு செல்வதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவர் நாகர்கோவில் செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சிவகாசியில் இருந்து கார் மூலம் நெல்லை வருகிறார்.

பின்னர் பாளை கேடிசி நகரில் நெல்லை மாநகராட்சியில் போட்டியிடும் 55 வார்டுகளில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி செல்கிறார். அபிராமி மஹாலில் நடைபெறும் நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இதனை முடித்து கொண்டு மாலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலமாக சென்னை செல்கிறார்.

இதே போல் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். வருகிற 14ம் தேதி தூத்துக்குடி, நெல்லையில் அவர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

No comments

Thank you for your comments