Breaking News

திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு; அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது - இபிஎஸ் பிரச்சாரம்...

விருதுநகர்:

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதலமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின். கடந்த 8 மாதங்களாக திமுக அரசு எந்த நல திட்டத்தையும் செய்யவில்லை..  திமுக அரசு ஒரு சர்வாதிகார அரசு; அதில் நியாயம் எதிர்பார்க்க முடியாது.  தமிழகத்தை ஒரு பொம்மை முதலமைச்சர் ஆள்கிறார் என சிவகாசியில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை சேலம் மாவட்டத்தில் நேற்று தொடங்கினார். அவர் இன்று முதல் வருகிற 15ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அவர் இன்று சிவகாசி, நெல்லை, தூத்துக்குடியில் பிரசாரம் மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தற்போது தான் மாநகராட்சியாகி முதல் தேர்தலை சந்திக்கிறது. சிவகாசியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு விருதுநகருக்கு வந்தார்.

அங்குள்ள தனியார் விடுதியில் தங்கிய அவர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு சிவகாசிக்கு சென்றார். பழைய விருதுநகர் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. 

அதில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிவகாசி மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசியதாவது:-

தமிழகத்தில் அமைந்துள்ள திமுக ஆட்சி இதுவரை எந்த திட்டத்தையும் புதிதாக செய்ததாக தெரியவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தான் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நாம் உருவாக்கிய திட்டங்களுக்கு தான் அவர் அடிக்கல் நாட்டுகிறார். வேறு எதையும் இதுவரை தி.மு.க. அரசு செய்யவில்லை.

விருதுநகர் மாவட்டத்திற்கு திமுக அரசு என்ன திட்டங்களை செய்துள்ளது என்பதை யாராவது கூற முடியுமா? மு.க.ஸ்டாலின் டீக்கடையில் அமர்ந்து டீ குடிப்பது படத்துடன் பத்திரிகைகளில் செய்தியாக முதல் நாள் வருகிறது. மறுநாள் நடைபயணம் சென்றார் என செய்தி வருகிறது. அதன் பிறகு சைக்கிள் ஓட்டுகிறார். உடற்பயிற்சி கூடம் சென்று உடற்பயிற்சி செய்கிறார். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு உங்களை முதலமைச்சர் ஆக்கினார்கள். இதற்காகவா மக்கள் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள்?.

கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி முதல்-அமைச்சர் ஆனவர் மு.க.ஸ்டாலின். இப்படி செய்தவர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்?. நிச்சயம் செய்ய மாட்டார்.

கடந்த அதிமுக ஆட்சியில் மக்களுக்கு சிறப்பான திட்டங்களை தந்துள்ளோம். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியினர் கொள்ளை அடிப்பதில்தான் குறியாக உள்ளனர். இதற்கு உதாரணமாக பொங்கல் பரிசு தொகுப்பை கூறலாம். அதில் பெரும் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

ஏழை-எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட பொங்கல் தொகுப்பு திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் அம்மா. அவரது வழியில் நான் முதலமைச்சராக இருந்தபோதும் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

தரமான பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்புடன் ரூ.1000 வழங்கினோம். கொரோனா காலத்திலும் மக்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 கொடுத்தோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார்.

ரூ.5 ஆயிரம் கொடுத்தால் என்ன? என்றார். ஆனால் இன்றைய தினம் அவர் ஆட்சியில் இருக்கும்போது 100 ரூபாயாவது கொடுத்துள்ளாரா?. நீங்கள் (மு.க.ஸ்டாலின்) சொன்ன மாதிரி ரூ.5 ஆயிரம் கொடுத்திருந்தால் மக்கள் சந்தோசமாக பொங்கல் கொண்டாடி இருப்பார்கள். ஆனால் தற்போது துன்பப்பட்டே பொங்கல் கொண்டாடினர்.

திமுக அரசு பொங்கல் தொகுப்பில் 21 பொருட்கள் வழங்குவதாக அறிவித்தனர். ஆனால் 15 அல்லது 17 பொருட்கள் மட்டுமே வழங்கி உள்ளனர். அதுவும் தரமானதாக இல்லை. எடை சரியாக இல்லை. பொங்கல் தொகுப்பில் கொடுக்கப்பட்ட பச்சரிசி உள்ளிட்ட பொருட்களில் தரம் இல்லை, கொடுக்கப்பட்ட புளியில் பல்லி இருக்கிறது. பொங்கல் வைப்பதற்காக கொடுத்த வெல்லத்தை ஒரு பெண்மணி எடுத்து காட்டுறாங்க... அந்த வெல்லம் பயன்படுத்த முடியாத வகையில் ஒழுகி ஓடுகிறது.

இப்படிப்பட்ட பொங்கல் தொகுப்பு கொடுத்தது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு என்பதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

மக்களுடைய வயிற்றில் அடித்த கட்சி திமுக கட்சி. இதற்கு தி.மு.க. அரசால் கொடுக்கப்பட்ட அந்த புளியே சாட்சி. புளியில் பல்லி இருக்குது என்று சொல்லி இதனை ஒருவர் பேட்டி அளித்தார். அந்த பேட்டியை வைத்து அவர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்குப்பதிவு செய்தனர். அதனால் அவருடைய மகன் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.

கொடுக்கப்பட்ட பொருள் தரமற்ற பொருள் என்று சுட்டிக்காட்ட ஜனநாயக நாட்டிலே ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அந்த உரிமையின் அடிப்படையில் அவரது கருத்தை தெரிவித்தார்.

அந்த கருத்தை தெரிவித்தன் காரணமாக அவர் மீது ஜாமீனில் வரமுடியாத வழக்கு போட்டு ஒரு உயிரை பலி வாங்கிய அரசாங்கம்தான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம். ஒரு சர்வாதிகார அரசாங்கமாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்திடுவேன் என மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறினார். ஆனால் அதனை ரத்து செய்தாரா? குடும்ப தலைவிக்கு ரூ.1000, சிலிண்டர் மானியம் ரூ.100, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என வாக்குறுதிகளை தி.மு.க. வழங்கியது. ஆனால் அந்த வாக்குறுதிகள் இப்போது என்ன ஆனது. தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அவர்களிடம் தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. அதன் பின்னர் கட்சியை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு எல்லாம் அஞ்ச மாட்டோம். அந்த வழக்குகளை தைரியமாக சந்திப்போம். தி.மு.க. எத்தனை வழக்கு போட்டாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வேண்டும் என்றே பொய் வழக்கு தொடர்ந்துள்ளனர். வேலை வாங்கி தருவதாக பணத்தை யாரோ ஒருவர் கொடுத்ததாக கூறி ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கை பதிவு செய்கின்றனர். கட்சி நிர்வாகிகளை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணி செய்யாமல் இருக்க வழக்கு போடுகிறார்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து அ.தி.மு.க. தொண்டர்கள் மக்கள் பணிகளை தொடருவார்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசுகையில், தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். நாம் ஆட்சி காலத்தில் செய்ததை மக்களிடம் சொன்னாலேபோதும் அவர்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களிக்க தயாராக இருக்கிறார்கள் என்றார்.

No comments

Thank you for your comments