வேலூர் ஜெயிலில் வாலிபர் திடீர் மரணம்
வேலூர், பிப்.16-
வேலூர் ஜெயிலில் வாலிபர் திடீர் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சாமியார் மடத்தை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 34). இவருக்கும் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரது மகள் நந்தினி (26) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.ஒரு ஆண் குழந்தை உள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நந்தினி வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். ஆம்பூர் டவுன் போலீசார் சென்று உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நந்தினியின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை முரளி ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். மேலும் அவரது உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக ராஜா மீது வழக்கு பதிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜமணியை கைது செய்து ஆம்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது ராஜமணியை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து ராஜாமணி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று காலையில் வேலூர் ஜெயிலில் இருந்த ராஜாமணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். உடனடியாக அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜாமணி இறந்துவிட்டார்.
ராஜா மணிக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் ஜெயிலில் இருந்தபோது அவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதூ தொடர்பாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments
Thank you for your comments