ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது!
நெல்லை :
விவசாயிகள் பிரதமர் மோடியை வில்லனாக பார்ப்பார்களே ஒழிய கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, தேர்தல் மேலிட பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் இன்று நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்தனர்.
வள்ளியூரில் பிரசாரத்தை தொடங்கிய ரமேஷ் சென்னிதாலா, கே.எஸ். ஆழகிரி ஆகியோர் பேசினார். பின்னர் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது, இந்திய தேசியத்திற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சுதந்திர போராட்டத்தில் பாரதிய ஜனதாவோ, ஆர்.எஸ்.எஸ். கலந்து கொண்டது கிடையாது. ஒரே ஒரு நாள், ஒரு மணி நேரம் அல்லது ஒரு நிமிடம் கூட சுதந்திர போராட்டத்துக்காக கலந்து கொண்டு அவர்கள் சிறை சென்றதும் கிடையாது.
ஆங்கிலேய ஆட்சியே இருந்தால் நலம் என்று கருதியவர்கள் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகா சபா. மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றவர்கள், அதை நியாயப்படுத்துகிறவர்கள் சுட்டுக்கொன்ற கோட்சேவுக்கு சிலை வைக்கிறார்கள், மாலை அணிவிக்கிறார்கள்.
இந்திய மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள், வேற்றுமையில் ஒற்றுமை காணவேண்டும் என்று விரும்புபவர்கள். ஆனால் பாரதிய ஜனதா பழமைவாதிகளாக இருக்கிறார்கள்.
மீண்டும் இந்திய சமுதாயத்தின் சக்கரத்தை பழங்காலத்துக்கு இழுத்து செல்ல வேண்டும் என கருதுகிறார்கள். அது மிகவும் தவறானது. ஒரு காலத்திலும் காவிக்கொடி தேசிய கொடியாக மாற முடியாது. வேண்டுமானால் காவிக்கொடி கலவர கொடியாக மாறும்.
3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து 1 வருட காலம் விவசாயிகள் டெல்லியில் அமர்ந்து போராடினர். அப்போது அவர்களை மோடி பார்க்காமல் கூட இருந்துவிட்டு, அந்த சட்டங்களை வேறு வழியே இல்லாமல் இவரே திரும்பப் பெற்றுவிட்டு பிறகு விவசாயிகள் மனதில் இவர் எப்படி இருக்க முடியும்?.
விவசாயிகள் இவரை வில்லனாக பார்ப்பார்களே ஒழிய கதாநாயகனாக பார்க்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து நாங்குநேரியில் நடைபெற்ற கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் பேசினர். கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், விஜய் வசந்த் எம்.பி. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments