Breaking News

கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்...

ஈரோ, பிப்.10-

ஈரோடு உள்பட 4 மாவட்டங்களில் கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் புஞ்சை புளியம்பட்டி, பவானிசாகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான விசைத்தறிகள் மற்றும் கைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த பகுதியில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான பட்டு நூல் மற்றும் கச்சாப் பொருட்களை பெங்களூரு மற்றும் சீனாவில் இருந்து கொள்முதல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பட்டு நூல் மற்றும் கச்சா பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது பட்டு நூல் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரத்து 500 வரை விற்பனையாகி வருகிறது. இதனால் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து நூல் விலையை குறைக்க மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இன்று முதல் வருகிற 20-ந் தேதி வரை ஈரோடு, கோவை, திருப்பூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கி உள்ளனர்.

இதனால் கைத்தறி பட்டு உற்பத்தி கூடங்கள் தொழிலாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வேலைநிறுத்தம் காரணமாக பல லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து கைத்தறி பட்டு சேலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

நூல் விலை உயர்ந்தாலும் பட்டு சேலைகள் விலை உயர்த்தப்படாமல் உள்ளது. எனவே நூல் விலையை குறைக்கக் கோரி இன்று முதல் 10 நாட்களுக்கு பட்டு நூல் வார்ப்பதையும், நெசவு செய்வதையும் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.

எனவே மத்திய அரசு மற்றும் ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுத்து பட்டு நூல் விலை மற்றும் மூலப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments

Thank you for your comments