Breaking News

கோவையில் மர்ம சூட்கேஸால் பரபரப்பு

கோவை :

கோவையின் இதய பகுதியான காந்திபுரத்தில் 3  பஸ்நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒரு பகுதியில் இருந்து நகர பஸ்களும், மற்றொரு பகுதியில் இருந்து விரைவு பஸ்களும், எதிர்புறத்தில் இருந்து மேட்டுப்பாளையம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களும் புறப்பட்டுச் செல்லும். இதனால் காந்திபுரம் பஸ்நிலைய சந்திப்பு எப்போதும் பொதுமக்கள் கூட்டத்தால் பரபரப்பாகவே காட்சி அளிக்கும். 

இந்தநிலையில் இன்று காலை நகர பஸ் நிலையத்துக்கும், எதிரில் உள்ள பஸ்நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள பாலத்தின் அடிப்பகுதியில் சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுபற்றி காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

போலீசார் விரைந்து சென்று சூட்கேசை ஆய்வு செய்தனர். பின்னர் சந்தேகத்தில் வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை நடத்தினர். அப்போது பெட்டியில் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து பெட்டியை திறந்து சோதனை செய்தனர். அது வெறும் காலி பெட்டியாக இருந்தது. 

இதையடுத்து அந்த சூட்கேசை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். அதன்பிறகே அங்கு நிலவிய பரபரப்பு ஓய்ந்தது. கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ந் தேதி கோவையில் பல இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். குண்டுவெடிப்பு தினம் என்பதால் கோவை மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்தநிலையில் காந்திபுரம் பஸ்நிலையத்தில் மர்ம சூட்கேஸ் கிடந்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. பீதியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் யாராவது சூட்கேசை வைத்து சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள். 

No comments

Thank you for your comments