தோல்வி ஒரு பொருட்டல்ல- கட்சியினருக்கு உத்வேகம் அளித்த ராமதாஸ்
சென்னை:
நமது வேலையை நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும். கிராமம் கிராமமாக செல்லுங்கள், திண்ணை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் பேசுங்கள். இன்னும் 2 ஆண்டுகளில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.
காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க. செயலாளர்களுடன் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு பாமக வேட்பாளர்கள் வெற்றி பெறாததற்கான காரணங்கள் பற்றி கேட்டறிந்தார். அப்போது ஓட்டுக்கு பணம் அதிக அளவில் வழங்கப்பட்டது பற்றி கூறினார்கள்.
பின்னர் அவர் நிர்வாகிகளிடம் பேசும் போது, தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜமானதுதான். பெரிய பெரிய கட்சிகள் கூட தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன. எனவே தோல்வி, பணம் கொடுப்பது பற்றி யோசிக்காதீர்கள்.
நமது வேலையை நாம் தொடர்ந்து தொய்வில்லாமல் செய்ய வேண்டும். கிராமம் கிராமமாக செல்லுங்கள், திண்ணை பிரசாரங்கள் மூலம் மக்களிடம் பேசுங்கள். இன்னும் 2 ஆண்டுகளில் வரப்போகும் பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள்.
தமிழகத்தின் தென் கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் நமது வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேற்கு மாவட்டமான ஈரோட்டிலும் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
எனவே எந்த ஊரிலும் பாமக கிளை இல்லை என்ற நிலை இருக்கக் கூடாது. அனைத்து வாக்கு சாவடிகளிலும் பாமக ஏஜெண்ட் இருக்க வேண்டும். நமது உழைப்பின் மூலம் மக்கள் செல்வாக்கை பெற முடியும் என்று கூறினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். மக்கள் சந்திப்புகள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து நடத்தும்படி அறிவுறுத்தினார்கள்.
ஆலோசனைக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் இசக்கி படையாட்சி, அமைப்பு செயலாளர் செல்வக்குமார், திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் கே.என். சேகர், ஆலப்பாக்கம் சேகர், தினேஷ்குமார், ரமேஷ், சிவப்பிரகாசம், மாவட்ட தலைவர்கள் விஜயன், ஞானப்பிரகாசம், ரமேஷ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் மகேஷ்குமார், அரி கிருஷ்ணன், மாவட்ட தலைவர் உமாபதி, செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட செயலாளர்கள் நிர்மல்குமார், இராதாகிருஷ்ணன், ஜே.எம்.சேகர், கணபதி, மாவட்ட தலைவர்கள் ஜேஷ்வா, சதீஷ், கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments