முதலீட்டாளர்களை ஏமாற்றிய யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் நிறுவன சொத்து முடக்கம்..!
கோவை, பிப்.10-
கோவை மாவட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிறுவனத்துக்கு சொந்தமான, 60 கோடி ரூபாய் சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கினர்.
கோவை, பீளமேட்டில், 2017ல் செயல்பட்ட 'யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ்' நிறுவனம், நான்கு திட்டங்களை அறிவித்து, மக்களிடம் பணத்தை முதலீடாக பெற்றது. ஆனால், உரிய காலத்தில் வட்டி, அசல் தராமல் மோசடி செய்தது.
கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் மாவட்டங்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 15 ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.நிறுவனத்தை நடத்திய, சூலூர், பொன்னாக்காணியைச் சேர்ந்த ரமேஷ்(31), கனகராஜ்(20), ஜாஸ்கர்(28) கைது செய்யப்பட்டனர்.
முதலீட்டாளர்களில் சிலர் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, பாதிக்கப்பட்டோருக்கு 21 கோடி ரூபாய் திரும்ப வழங்கப்பட்டது. மோசடி நிறுவன வங்கி கணக்குகளில் இருந்த 30 கோடி ரூபாய் வருமான வரித்துறை உதவியுடன் முடக்கப்பட்டுள்ளது.
மேலும், 22 இடங்களில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான வீடு, வீட்டு மனைகள், தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டன. வழக்கில் கைதான நிறுவன உரிமையாளர் ரமேஷ், தற்போது ஜாமினில் விடுதலையாகியுள்ளார். கனகராஜ், ஜாஸ்கர் சிறையில் உள்ளனர்.
No comments
Thank you for your comments