அதிமுக வேட்பாளர் மர்மச்சாவு - கழுத்தில் இறுக்கி இருந்தது துண்டு!...
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜானகிராமன்(34) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வழக்கீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (34). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த ஜானகிராமன் காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் 36வது வார்டுக்கான மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று ஜானகிராமன் உள்பட அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். இதில் ஜானகிராமன் கலந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமியுடன் புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.
நேற்று வரை தனது வார்டு பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தனது தம்பியுடன் ஜானகிராமன் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. அதிகாலையில் அவருடைய தம்பி எழுந்து பார்த்தபோது ஜானகிராமன் கட்டிலில் இருந்து கீழே இறங்கி துண்டு கழுத்தில் இறுக்கிய நிலையில் அமர்ந்து குனிந்த நிலையில் இருந்துள்ளார்.
உடனடியாக அவரது தம்பி தட்டி எழுப்பியபோது எழுந்திருக்காததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைக்கேட்டு குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து ஜானகிராமனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் இழப்பு ஏற்பட காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த மூன்று தினங்களாக அவருக்கு வந்த அவரது கைபேசி உரையாடலை முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக வினர் விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோட்டை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளரின் சமரசத்தின் பேரில் முறையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததின் பேரில் மறியல் கைவிடப்பட்டது இதுகுறித்து புகார் மனு அவரது உறவினர்கள் மற்றும் அதிமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்த சம்பவம் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதிமுக தொண்டர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
No comments
Thank you for your comments