மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரத்தில் மூன்று மாத காலமாக சரி வர குடிதண்ணீர் வழங்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 45வது வார்டு வைத்தீஸ்வரன் கோவில் தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த மூன்று மாத காலமாக சரி வர குடி தண்ணீர் வரவில்லை என பலமுறை காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த அப்பகுதியினர் தங்களுக்கு சரி வர குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்காத காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலேன்கேட் பகுதியில் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் காலி குடங்களுடன் 20க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த சின்ன காஞ்சிபுரம் போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகராட்சி ஊழியர்களை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்விகள் எழுப்பியதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர் போலீசாரின் சுமூக பேச்சுவார்த்தைக்கு பின் சாலை மறியல் கைவிடப்பட்டது.
திடீர் சாலை மறியலால் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல நாட்களாக வீணாக கடலில் சென்று கலந்த பின்பும் கூட காஞ்சிபுரத்தில் தொடர்ந்து தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருப்பது மிகவும் வருத்தமளிப்பதாக என அப்பகுதி மக்கள் மிகவும் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
No comments
Thank you for your comments