நாளை கூடுகிறது நாடாளுமன்றம்... பெகாசஸ் விவகாரம் புயலை கிளப்பும்..!
புதுடெல்லி:
எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31-01-2022) கூடுகிறது. முதல் நாள் நாடாளுமன்ற இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.
அப்போது அவர் கடந்த ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய நலத் திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றிய விவரங்களை அறிவிப்பார்.
நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் 2022- 2023-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார். இந்த பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் மற்றும் வரிச்சலுகைகள் அதிகளவில் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு ஏழுந்துள்ளது.
குறிப்பாக வருமானவரி சலுகை, பொருளாதார வளர்ச்சிக்கான சலுகை ஆகியவை மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அதுதொடர்பான அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.
வருகிற பிப்ரவரி 2ம் தேதி முதல் 7ம் தேதி வரை குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரு சபைகளிலும் விவாதம் நடைபெறும். இதன் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முதல் 2 நாட்களுக்கு கேள்வி நேரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் போது முக்கிய பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
விவசாயிகள் பிரச்சினை, வேலை இல்லாத பிரச்சினை, தனியார் மயமாக்கும் விவகாரம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என்று தெரிகிறது.
இதற்கிடையே எதிர்க் கட்சித் தலைவர்களின் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்டதாக எழுந்துள்ள பெகாசஸ் விவகாரம் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பும் என்று தெரிகிறது. இதற்கு பதில் அளிப்பதற்காக மத்திய அரசும் தயாராகி வருகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நிறைவு பெற்றதும் 7ம் தேதி நாடாளுமன்ற மக்களவையிலும், 8ம் தேதி மாநிலங்களவையிலும் பிரதமர் மோடி பதில் அளித்து பேச உள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறும். அடுத்த கட்ட கூட்டத்தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் நீடிப்பதால் நாடாளுமன்றம் முழுவதும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
No comments
Thank you for your comments