பொதுமக்களை பலி வாங்க துடிக்கின்றதா வேலூர் மாநகராட்சி சுகாதாரத்துறை?
வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்தில்
சுகாதார சீர்கேட்டினால்
நோய் தொற்று பரவும் அபாயம்..!
வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளான சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், வேலப்பாடி, உட்பட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை கொட்டி புதியதாக தொற்று நோய்கள் பரவும் பேராபத்தை மாநகராட்சி 3வது மண்டல அலுவலர்கள் ஏற்படுத்தியுள்ளனர்... கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.... சுகாதாரத்தை கண்காணிக்கவேண்டிய சுகாதார ஆய்வாளர் (sanitary Inspector) ஆர்.சிவக்குமார் மெத்தனபோக்கில் உள்ளார்... புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் சுகாதார ஆய்வாளர் (SI) ஆர்.சிவக்குமார் தான்தோன்றிதனமாக செயல்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.. வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி மண்டலம் 3க்கு உட்பட்ட பகுதிகளான சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், வேலப்பாடி, சலவன்பேட்டை உட்பட அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை சரிவர அகற்றாமல் தெருக்களில் சிதறிகிடக்கின்றன..... வேலூர் மாநகராட்சியில் 3வது மண்டலத்தில் எங்கு திரும்பினாலும் சுகாதார சீர்கேடுதான்... குப்பை குவியலும், கழிவுநீர் கால்வாய்களில் அடைபட்டு சாலையில் கழிவு நீர் ஓடும் அவல நிலையே நீடிக்கின்றது....
வேலூர் மாநகராட்சி 3வது மண்டலத்தில் வேலப்பாடி சுற்றுவட்டாரத்தில் சேகரமாகும் குப்பைகளை கொண்டு வந்து மாநகராட்சி நிர்வாகம் சாஸ்திரி நகர் செல்லும் சாலையில் காணாறு ஓரத்தில் வேலப்பாடி ரேஷன் கடை எதிரில் கொட்டிச் செல்கின்றனர்... இதனால் அந்தப் பகுதி துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் அங்கு ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலைதான்... அங்கு உள்ள குப்பை கழிவுகளில் ரேஷன் கடையில் உள்ள பொருட்களும் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதில் ஐயமில்லை...
அங்கு அருகாமையில் டிகேஎம் கல்லூரி, சின்ன கிருஷ்ணசாமி பள்ளி, அரசு துவக்கப்பள்ளி உள்ளது. அந்த சாலை வழியாகதான் சாஸ்திரிநகர், கன்னிகாபுரம், முருகன் நகர் என பல பகுதி மக்கள் செல்ல வேண்டும்.. இந்நிலையில் அந்த சாலை வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது.
காணாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் செல்ல இயலாமல் குப்பை மடையால் தேங்குகின்றன... கழிவுநீரில் குப்பையும் கலந்து தேங்குவதால் நிலத்தடி நீரும் மாசடைய ஆரம்பித்துள்ளது. காணாற்றில் குப்பைகளை கொட்டுவதால் மழைநீர் செல்ல முடியாமல் தடைபடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அதுமட்டுமின்றி குப்பைகளை கொட்டி எரிப்பதால் அந்தவழியாக கல்லூரி மாணவிகள், பள்ளி மாணவ-மாணவிகள் செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர்... குப்பைகளை எரிப்பதால் அவ்வப்போது அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சி அளிக்கின்றன... காற்று மாசால் அந்த சுற்றுவட்டார பகுதிகளான சங்கரன்பாளையம், வேலப்பாடி, சாஸ்திரிநகர் மக்களுக்கு மூச்சு திணறலும் ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்து செயலாற்ற இடம் உள்ளது.. ஆனால் அந்த இடத்தை பயன்படுத்தாமல் பூட்டு போட்டு மூடி வைத்துள்ளனர் ஏன் என்பது விடைதெரியாத கேள்வியாக உள்ளது...
கொரோனா வைரஸ் தாக்கம் குறையாத பட்சத்தில் இந்த புதிய தொற்று நோய்கள் வேகமாக பரவ வழிவகை செய்துள்ளனர். புதியதாக நோய்கள் பரவ வாய்ப்பு இருப்பது தெரிந்தும் தவறு செய்கின்றனர் மாநகராட்சி அலுவலர்கள். இவ்வாறு செய்வதற்கு எப்படி அவர்களுக்கு மனம் வந்தது என்பது விடை தெரியாத கேள்வியாக பொதுமக்கள் மத்தியில் வலம் வருகிறது... குறிப்பாக தங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்த வேண்டிய மாநகராட்சி நிர்வாகம் தாமாக முன்வந்து குப்பைகளை மலைபோல் கொட்டி தூய்மைக் கேடு விளைவித்து வருகிறது. தொற்று நோயை இலவசமாக மக்களுக்கு பரப்பி வருகிறது என்பதில் ஐயமில்லை...
இதுகுறித்து பொதுமக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க விரும்பினால் யாரும் மாநகராட்சி 3வது மண்டல அலுவலர்கள் தொலைபேசி அழைப்புக்களை தொடுவது இல்லை. மாறாக அலட்சியம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது...
இதுமட்டுமின்றி, அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் போதுமான அளவில் குப்பை தொட்டிகள் இல்லாததாலும், அவரவர் வீட்டின் வெளியிலும், தெரு ஓரங்களிலும் குப்பைகளை கொட்டி வருகின்றனர்... அந்த குப்பைகளை சுகாதாரப் பணியாளர்கள் சரிவர அகற்றுவதில்லை... இதனால் பொதுமக்களே குப்பைகளை எரிக்கின்றனர்... இதனால் புகையால் பொதுமக்கள் அவதியுறுவதும் தொடர்கதையாக உள்ளது... சுற்றுசூழலும் பாதிக்கின்றன...
குறிப்பாக சங்கரன்பாளையம் மெயின்ரோடு பாலத்திற்கு கீழே கழிவு நீர் செல்லும் பாதையில் குப்பைகள் கூலங்கள் சேர்ந்து உள்ளன... கழிவுநீரோடு குப்பைகளும் சேர்ந்து ஈக்கள்.. கொசுக்கள்.. உருவாகின்றன... அதோடு இந்த குப்பை கழிவுகளால் மாடுகள் அட்டகாசமும் அரங்கேறுகின்றன...
இதையடுத்து சாயிநாதபுரம் அருகே மக்கள் செல்லும் முக்கிய முச்சந்தி சேருமிடத்தில் குப்பைகளை எரித்து புகை சூழ்கின்றது.. வாகன ஓட்டிகளும் கடும் அவதியுறுகின்றனர்... இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது என்று வாகன ஓட்டிகள் கவலை தெரிவிக்கின்றனர்...
அப்படியே சாயிநாதபுரம் பாலத்திற்கு கீழே கழிவு நீர் செல்லும் வகையில் சிறு ஓடை, அதன் இருபுறமும் குப்பைகள் அதன் நடுவே பன்றிகளின் கூட்டம் அட்டகாசம்... அங்கும் ஈக்கள்.. கொசுக்கள்.. புழுக்களுக்கும் பஞ்சம் இல்லை....
குப்பை குவியல்கள்தான் அதிகம் என்றால் கழிவுநீர் ஓடும் கால்வாய்களின் நிலையோ... கேள்வி குறியே.... குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவு நீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவு நீர் ஆறாக ஓடுகின்றன....
ஓட்டேரி காமாட்சிபுரத்தில் வார்டு எண்.45ல் ஈ.வே.ரா.பெரியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் அடைப்பினால் கழிவு நீர் தெருவில் தேங்கிய நிலையில் உள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதிமக்கள் பல முறை புகார்கள் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்த தெருவை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்...
ஈ.வே.ரா.பெரியார் தெருவில் கடந்த ஒருமாதமாக தேங்கும் கழிவுநீரின் துர்நாற்றத்தால் அங்கு குடியிருக்க முடியாமல் தவித்து வருகின்றனர்... அதுமட்டுமின்றி தேங்கிய தண்ணீரில் புழுக்களும், கொசுக்களும் அதிகம் உற்பத்தியாகி வருகின்றன... செய்வதறியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்... துர்நாற்றத்தால் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறும் அவல நிலையிலும் சுவாச கோளாறு ஏற்படும் அபாயத்தில் அத்தெரு மக்கள் பெரும் துன்பத்தில் தள்ளாடுகின்றனர்... இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்...
வரி வாங்குவது மட்டும்தான் மாநகராட்சியின் வேலையா... மக்களுக்கு பணியாற்றுவது என்றால் காணாமல் போய்விடுக்கின்றனர்... புகார்கள் அளித்தாலும் எங்களுக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லையென்பது போல் மெத்தனமாக செயல்படுகின்றனர்... செவடன் காதில் ஊதிய சங்கு போன்றுதான் பொதுமக்கள் அளிக்கும் புகாரின் நிலை... என்று புலம்புகின்றனர்...
அதேபோன்று டி.கே.எம். கல்லூரி சாலையில் உள்ள கால்வாயும் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் செல்ல முடியாமல் தேங்கி அங்கேயே ஊறுகின்றன...
அதுமட்டுமின்றி டி.கே.எம்.கல்லூரி சாலையில் எல்.ஐ.சி காலனி சுற்றியும் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகின்றன.. அந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் சென்றுவர மிகவும் சிரமப்படுகின்றனர். ஏற்கெனவே பாதாள சாக்கடை பணியால் அந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது... இந்நிலையில் குப்பை துர்நாற்றத்தாலும், குப்பை எரிக்கப்பட்ட புகையிலும் அவதிபட்டுத்தான் அந்த சாலையை கடக்கவேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது...
இதுபோன்று குப்பைகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைந்து அங்குள்ள பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை ஏற்படுகிறது. சேகரிக்கும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தரம் பிரித்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும், இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேலூரில் 3வது மண்டலத்தில் உள்ள சுகாதார ஆய்வாளர் (sanitary Inspector) ஆர்.சிவக்குமார் மெத்தனபோக்கில் உள்ளார்... அனைத்து பகுதிகளும் சுகாதாரமாக உள்ளதா? என்று கண்காணிப்பதில்லை...
மக்கள் வரிப்பணத்தை மாத ஊதியமாக பெற்றுக் கொண்டு பணியாற்றும் இதுபோன்ற அலுவலர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் அவர்களை தட்டிக்கழிப்பது சேவை குறைபாடு ஆகும். சட்டத்தை மதிப்பதும் இல்லை. எதற்கெடுத்தாலும் “ப” வைட்டமின் புகுந்து விளையாடுகிறது. மாநகராட்சியின் செயல்பாடுகளை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை. எப்போது பார்த்தாலும் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கிய இருக்கைகளில் அமர்ந்து பணி செய்வது இல்லை.
பொதுமக்களை மிகவும் கேவலமாக நடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. 3வது மண்டலத்தில் தான்தோன்றித்தனமாக பல அலுவலர்கள் நடந்து கொள்வதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே போகின்றனர்.
போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகள்.... விபத்து ஏற்படும் அபாயம்...
குறிப்பாக, மாநகராட்சி 3வது மண்டலத்துக்கு உட்பட்ட சாலைகளில் அதிகளவில் கால்நடைகள் சுற்றிதிரிகின்றன... ராஜா தியோட்டர் முதல் பாகாயம் வரை இரு சாலைகளில் மாடுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
குறிப்பாக ராஜா தியேட்டர், தொரப்பாடி பகுதிகளிலும், அண்ணா சாலையிலும் கால்நடைகள் அதிக அளவில் சாலைகளை ஆக்கிரமித்து வருகின்றன. அவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை அச்சுறுத்துவதால் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.
கால்நடைகள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளை ஆக்கிரமித்து நிற்பதால் அப்பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்படுவதுடன், சில சமயம் விபத்துக்களும் நிகழ்கின்றன.
இந்த பாதிப்புகள் தொடர்ந்து நீடித்து வருவது பற்றி பொதுமக்கள் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவிக்கப்பட்டும் நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே, வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது இடங்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்வதோடு, கால்நடை வளர்ப்போருக்கு அபராதம் விதித்தும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலை மாற வேண்டும், பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் மாநகராட்சி அலுவலர்கள் பணியாற்ற வேண்டும்.
3வது மண்டல உதவி ஆணையரோ எந்த பணி எவ்வாறு நடக்கின்றது என்று தன்கீழ் வேலை செய்பவர்களை கண்காணித்தால் இதுபோன்று சுகாதார சீர்கேடு ஏற்படாது.. யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன என்று தன்வேலையை கூட முழுமையாக அறியாமல் பணியாற்றுகிறார்...
3வது மண்டல உதவி ஆணையரை அலைபேசியில் தொடர்புகொண்டால்... தன்னோடு உள்ள வேறு அலுலரிடம் கொடுத்துவிடுகிறார்... அவரோ உதவி ஆணையர் புதிதாக வந்தவர் அவருக்கு ஒன்றும் தெரியாது என்று மழுப்பலாக பதில் கூறி தப்பிக்கும் வித்தையை கற்றுள்ளனர்...
கொரோனா பரவும் இந்த காலகட்டத்திலும் நன்கு ஏமாற்றி விட்டு பொதுநலம் மறந்து சுயநலத்துடன் பணியாற்றுகின்ற நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது. மாநகரட்சி ஆணையர், இதுபோன்று மாநகராட்சியில் ஏமாற்றி வலம் வரும் அலுவலர்களை களையெடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.
இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தி அவரது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் முன்வர வேண்டும். அப்போதுதான் மற்ற மண்டலங்களில் பணியாற்றும் உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் பொறுப்புடன் பணியாற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் எழுந்துள்ளது. மாநகராட்சி ஆணையர், 3வது மண்டலத்தில் ஏமாற்றி கொண்டு திரியும் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் மீது சாட்டையை சுழற்றுவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடுமையான கொரானா மற்றும் ஓமைக்கரான் தொற்று நோய் மக்களை தாக்கி பலி வாங்கும் முன்பே சுகாதாரத்துறை மக்களை குறிப்பாக இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால் தொற்று பரவி நேராக உயிரை பலிவாங்கி பொதுமக்களின் உடல்களை மரணக் குழியில் தள்ள விரும்புகின்றதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்... இனியாவது சுகாதார துறை விழித்துக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்...
No comments
Thank you for your comments