Breaking News

தமிழக மக்களுக்கு ஓர் நற் செய்தி ! - மின் கட்டணத்தில் மாற்றம்... விரைவில் அமல்

சென்னை:

மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை விரைவில் அமலுக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம்  ‘டெலஸ்கோபிக் டாரிஃப்’  என்ற முறையில் கணக்கிடப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் இந்த திட்டம் நடைமுறையில் இருந்தது. இந்த முறையில், மின் கட்டணம் என்பது 2 மாதங்களுக்கு ஒருமுறை வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தி, கட்டண நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த வகையில், 2 மாதங்களிலும் சேர்த்து ஒரு வீட்டில் 100 யூனிட் மின்சாரம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த 100 யூனிட்டுகளுக்கான மின் கட்டணம் முழுவதும் இலவசம். 

ஆனால் 100 யூனிட்டுகளுக்கு மேலாக மின் செலவு இருந்தால், 101-வது யூனிட்டில் ஆரம்பித்து 200 யூனிட்டுகள் வரையிலாக உள்ள ஒவ்வொரு யூனிட்டுக்கும் 1 ரூபாய் 50 காசு வசூலிக்கப்பட்டது. உதாரணமாக, ஒரு வீட்டில் 150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருந்தால், முதல் 100 யூனிட் மின்சாரத்துக்குக் கட்டணம் கிடையாது. 101-வது யூனிட்டிலிருந்து 150-வது யூனிட் வரையிலான 50 யூனிட்டுகளுக்கு மட்டும் கட்டணம் உண்டு. 

அதாவது ஒரு யூனிட்டுக்கு 1 ரூபாய் 50 காசு என்ற வகையில், 50 யூனிட்டுக்குமாக மொத்தம் 75 ரூபாய். இதனுடன் நிரந்தரக் கட்டணம் 20 ரூபாயைச் சேர்த்து மொத்தமாக 95 ரூபாயை அந்த மாதத்துக்கான மின் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழக அரசின் தற்போதைய மின் கட்டண அணுகுமுறையால் நடுத்தர மக்கள் தான் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அதிலும் தற்போதுள்ள கொரோனா நெருக்கடி போன்ற நெருக்கடியான நேரங்களில் இன்னும் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறார்கள். 

அதுமட்டுமின்றி,  இரு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கீடு செய்யப்படுவதால் மக்கள் அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உதாரணமாக ஒருவர் இருமாதங்களும் சேர்ந்து 400 யூனிட் பயன்படுத்துகிறார். அவருக்கு 100 யூனிட் மட்டுமே இலவசமாக கிடைக்கும். மீதம் 300 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

இதே 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் எனில் 400 யூனிட்களுக்கு மேல் கட்டணம் செலுத்துகிறார்கள். இந்த முறையில் கட்டணமும் அதிகம். இதே மாதம் ஒரு முறை கணக்கீடு செய்யும் போது தற்போது 520 யூனிட் பயன்படுத்துவோர், மாதம் ஒரு முறை எனும்போது சராசரியாக 260 யூனிட் பயன்படுத்துவார்கள். இதில் 100 யூனிட் இலவசம் எனும்போது, 160 யூனிட்டுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் நிலை வரும், கட்டணமும் குறையும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண முறை அமல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படிருந்தது. 

அதன்படி தான், தற்போது தமிழகத்தில் மாதாந்திர மின்கட்டண கணக்கீடு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

இன்று முதல் நடக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிடுமா?  என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

1 comment:

  1. மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறை பாராட்டுதலுக்குரியது.வரவேற்கிறோம்.

    ReplyDelete

Thank you for your comments