அமெரிக்காவில் பனிப்புயல் - மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்
நியூயார்க்:
கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்கக் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பெரிய அளவிலான பனிப்புயல் தாக்கியுள்ளது. கடுமையான பனிப் பொழிவும் சூறாவளியும் அப்பகுதியில் ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக, 5 மாநிலங்களில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சில பகுதிகளில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மேலும், கடலோரப் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 6,000 அமெரிக்க விமானங்கள் இதன் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை நகரங்களில் பனிபுயல் வீசி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. நியூயார்க் மற்றும் அண்டை மாநிலமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. நியுயார்க் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 1,17,000 வீடுகளுக்கு மின்சாரம் இணைப்பு வழங்கப்படவில்லை.
நார் ஈஸ்டர் என அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பாஸ்டன் பகுதியில் 2 அடி உயரம் வரை பனி படர்ந்து மூடக்கூடும். மேலும், நியூயார்க்கின் சில பகுதிகளில் ஏற்கெனவே சுமார் 2 அடி வரை பனி மூடியுள்ளது. மைனேவின் சில பகுதிகளில் சனிக்கிழமை இரவு வரை 12 அங்குலம் வரை (30 செ.மீ.) பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கக்கூடும்.
இப்புயல் 'பாம்போஜெனிசிஸ்' நிலையை அடைந்துள்ளதாக தேசிய வானிலை சேவை சனிக்கிழமை அன்று உறுதிப்படுத்தியுள்ளது. 'பாம்போஜெனிசிஸ்' என்பது, குளிர்ந்த பனிக் காற்று வெப்பமான கடல் காற்றுடன் கலந்து வளிமண்டல அழுத்தத்தில் திடீரென வீழ்ச்சியை ஏற்படுத்துவதாகும். இதனால், பாம்ப் சைக்ளோன் (Bomb Cyclone) என அழைக்கப்படும் வெடிகுண்டு சூறாவளி ஏற்படுகிறது.
"பாம்போஜெனிசிஸ் என்பது புயல் மிக விரைவாக தீவிரமடைதல்," என கனெக்டிகட் வானிலை ஆய்வாளர் ஆஷ்லே பெய்லர் தெரிவித்தார்.
வடகிழக்கு முழுவதும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டிலிருந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுவது இதுவே முதன்முறை.
சுமார் 7.5 கோடி மக்கள் வசிக்கும் பகுதியில் இந்த புயல் ஏற்பட்டுள்ளது. நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாண்ட், ரோட் ஐலாண்ட், விர்ஜினியா ஆகிய மாகாணங்களின் ஆளுநர்கள் அப்பகுதிகளில் அவசரநிலை உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதன்மூலம், மக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி சாலைகளில் நடமாட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
"கடும் காற்று, கடும் பனி, பனிப்புயல் காரணமாக, தீவிரமான நார் ஈஸ்டருக்கான கூறுகளும் உருவாகியுள்ளன," என, நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார். பனிப்பொழிவு நின்றுவிட்டாலும், உறைபனி வெப்பநிலையால் பாதிப்புகள் ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
நியூஜெர்சியின் அட்லாண்டிக் நகர காவல்துறையினர், "வெளியே செல்வதன் மூலம், தங்கள் பணியை கடுமையாக்க வேண்டாம்," என கேட்டுக்கொண்டுள்ளனர். அதேநேரத்தில், ஆளுநர் பில் மர்பி மாகாணத்தின் புகழ்பெற்ற கடற்கரை இப்புயலால் அழிந்துவருவதாக தெரிவித்துள்ளார்.
கடலோரப் பகுதிகளில் ஒரு அடி உயரம் பனிப்பொழிவு காணப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. உறைபனியை அகற்றும் வாகனங்கள் சாலைகளில் செல்வதை பார்க்க முடிந்தது.பல பகுதிகளில் வாகனங்கள் பனிமூடி காணப்பட்டன. லாங் ஐலேண்ட் பகுதியில் ஒரு பெண் பனியில் உறைந்த நிலையில் தனது காரில் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டுள்ளது.
நகரங்களில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வலியுறுத்தப்பட்டது. மன்ஹாட்டனுக்கு வடக்கே தீவு பகுதியில் 25 சென்டிமீட்டர் அளவிற்கு உறைபனி குவிந்துள்ளது. ரயில் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் இருந்து பனியை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments