நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு..!
சென்னை, ஜன.27-
சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை என்று பா.ஜனதா எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசியதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரியலூர் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரி தமிழக பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பா.ஜனதா சட்டசபை தலைவரும், திருநெல்வேலி எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது நயினார் நாகேந்திரன் பேசுகையில்,
தமிழகத்தில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. சட்டசபையில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை எனப் பேசியிருந்தார்.
இது அதிமுக - பா.ஜ., கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுகவினர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கடுமையாக வார்த்தைகள் மூலம் விமர்சனத்தை வெளிப்படுத்தினர்.
மதுரை மண்டல அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் சத்யன் ‘‘அண்ணன் நயினார் நாகேந்திரன், நீங்கள் வேண்டுமானால் அதிமுக தோள் மேல் தொத்திக் கொண்டு பெற்ற சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்து விட்டு, தாங்களாக மீண்டும் வெற்றி பெற்று தங்கள் ஆண்மையை நிரூபியுங்களேன்.? ஆண்மை என்பது சொல் அல்ல செயல்.!!’’ என கடுமையான விமர்சித்திருந்தார்.
அதிமுக தொழில்நுட்ப பிரிவு ‘‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைபிடிப்பது போல், அ.தி.மு.க.-வின் தயவால் சட்டமன்றத்தில் நுழைந்து, தமிழகத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்துள்ள அ.தி.மு.க.-வுக்கு அரசியல் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை. ஆண்மையோடு தனித்து நில்லுங்கள் நயினார் நாகேந்திரன்!’’ என விமர்சனம் செய்திருந்தது.
சிங்கை ஜி ராமச்சந்திரன் ‘‘பொங்கல் பரிசு ஊழல் முதல் சட்ட ஒழுங்கு சீர்கேடு வரை அ.தி.மு.க. தலைமைகள் கடுமையாக விமர்சித்து பேட்டி கொடுத்ததால்தான் அவை வெளிச்சத்திற்கு வந்தன. நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் பதவி விலகி, அ.தி.மு.க. தயவில்லாது வென்று சட்டமன்றத்தில் நுழைந்து ஆண்மையை நிரூபிக்கலாமே?’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அ.தி.மு.க. கழக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் ‘‘அ.தி.மு.க ஆரம்பித்து 50 ஆண்டுகாலம் ஆகின்றது. நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேச்சு வருந்தத்தக்கது. நெல்லையில் பாஜக-வே இல்லை. தென்காசி, கோவை, கன்னியாகுமரியில் உள்ளது.
நெல்லை சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சியான பாஜக-விலிருந்து வேட்பாளரை அறிவித்தபோது ஒரு பைசாகூட வாங்காமல் அவருக்காக தேர்தல் பணி ஆற்றினோம். அதிமுக கூட்டணி இருந்த காரணத்தினால் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றிபெற முடிந்தது. அதிமுக-வை வைத்து வளர்ந்துவிட்டு, வளர்த்துவிட்ட இயக்கத்தை பற்றி பேசுபவர்கள் நன்றாகவே இருக்க மாட்டார்கள். அதிமுக-வை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதி இல்லை.
அ.தி.மு.க.-வை விமர்சனம் செய்தால் அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் அவர் நெல்லை வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம். அ.தி.மு.க. இல்லாமல் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது. அ.தி.மு.க. கூட்டணி இல்லாமல் எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. அ.தி.மு.க.-வில் இருந்தபோது அவரை அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ஜெயலலிதா. உங்களை உருவாக்கியது அ.தி.மு.க. என்பதை நயினார் நாகேந்திரன் மறந்து விடக்கூடாது’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதிமுகவில் எதிர்ப்பு அதிகரித்து வருவதை அறிந்த நயினார் நாகேந்திரன், ‘‘அதிமுக-வைப் பற்றி நான் கூறிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, நான் கூறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இந்த போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்கவேண்டுமென்பதே எங்கள் எண்ணம்" என்று விளக்கமளித்திருந்தார்.
இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட நினைத்த பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரிடம் பேசி வருத்தம் தெரிவிக்க முடிவு செய்துள்ளார். ஓ.பி.எஸ். போன் எடுக்காத நிலையில், எடப்பாடியிடம் நயினார் நாகேந்திரன் பேசியது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது:-
நயினார் நாகேந்திரனின் கருத்து பா.ஜ.வின் நிலைப்பாடு இல்லை. வார்த்தை தவறுதலாக வந்துவிட்டது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன். அதிமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுக - பா.ஜ., கூட்டணியில் எந்த சலனமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வோம். பல இக்கட்டான சூழ்நிலைகளில் பா.ஜ.விற்கு அ.தி.மு.க., துணை நின்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததால், இந்த பிரச்சினை இத்துடன் முடிவுக்கு வரும் என பா.ஜ.க.வினர் எதிர்பார்க்கின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் பா.ஜனதா இல்லாமல் அனைத்து வார்டுகளிலும் போட்டியிடுவோம் என அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments