பொதுத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு....
சென்னை, ஜன.5-
கொரோனா தொற்றின் காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளுக்குத் தடை விதித்து தமிழக முதலமைச்சர் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில், 10 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறுமா? என மாணவர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் அதுகுறித்தான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு குறைந்த நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்பிற்குச் சென்று வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றின் காரணமாக மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாநில அரசு உத்தரவிட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டு மீண்டும் ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் சார்பில், இந்த ஒமைக்ரான் நோய்த் தொற்று இதுவரை கண்டறியப்பட்ட உயிர் கொள்ளும் வைரஸ்களில் மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தடுப்பூசியை அதிகமாக எதிர்க்கும் தன்மை உள்ளதாகவும், தீவிரமாகப் பரவும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவ்வப்போது முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், ஆரம்ப வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியிலான வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் சூழலில் திட்டமிட்டபடி 2022 மார்ச் - ஏப்ரல் மாதங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் தொற்று காரணமாக மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், கடந்த 2019 - 20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. 1 முதல் 9ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ் செய்யப்பட்டது. கடந்த 2020 - 21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று கூறியுள்ளார்.
இதனிடையே, நாடு முழுவதும் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால் நடப்பாண்டில் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி உறுதியாகக் கூறியுள்ளார்.
No comments
Thank you for your comments