Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... அனைத்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர் ஆலோசனை!

சென்னை, ஜன.20-

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, புதிய வாக்காளர்களை சேர்ப்பது போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டது.

இதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் வார்டு எண்ணிக்கையை இறுதி செய்யும் பணிகள் கடந்த வாரம் முடிந்த நிலையில்  இது பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வமாக அரசிதழிலும் வெளியிட்டது.

இதன்படி இட ஒதுக்கீடு அடிப்படையில் வார்டுகளும் வரையறை செய்யப்பட்டுள்ளன. எந்தெந்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இட ஒதுக்கீடுபடி பிரிக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மாநகராட்சிகளையும் சேர்த்து மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் சென்னை, தாம்பரம் மாநகராட்சிகள் ஆதி திராவிடர் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சி ஆதிதிராவிடர் பொது பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடலூர், திண்டுக்கல், வேலூர், கரூர், சிவகாசி, காஞ்சிபுரம், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சி மேயர் பதவிகள் பொது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இட ஒதுக்கீடுபடி வார்டுகள் முழுமையாக பிரிக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களுடனும் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஏற்கனவே 5 கட்டங்களாக ஆலோசனை நடத்தி முடித்துள்ளார்.

தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளை அமைத்தல், மின்னணு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, பதட்டமான வாக்குச் சாவடிகளை கண்டறிதல், அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த மாதம் 31-ந்தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த சுப்ரீம் கோர்ட்டு ‘கெடு’ விதித்துள்ள நிலையில் ‘கொரோனா’ பரவல் காரணமாக தேர்தல் பணிகளில் சற்று சுணக்கம் ஏற்பட்டு வந்தது.

தற்போது அனைத்து பணிகளும் முடிந்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி 12 அல்லது 13-ந்தேதிகளில் நடத்தலாமா? என்று மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

இது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்தையும் கேட்க மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜனதா, தே.மு.தி.க., பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, தேசிய மக்கள் கட்சி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

அநேகமாக வருகிற 21 அல்லது 22-ந்தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

அடுத்த மாதம் (பிப்ரவரி) 12 அல்லது 13-ந் தேதிகளில் தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதுகுறித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளதாவது, “ தமிழக அரசு தேர்தலை நடத்த தயார், தேர்தல் ஆணையத்துக்கு தேதியெல்லாம் கொடுத்துவிட்டோம். இனி தேர்தல் எப்போது என்பது குறித்து தேர்தல் ஆணையம்தான் தெரிவிக்க வேண்டும். அரசு தரப்பில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவோம்“ என்று தெரிவித்தார்.

No comments

Thank you for your comments