Breaking News

ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை:  

சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஈஷா யோகா அறக்கட்டளைக்கு சொந்தமான கட்டிடங்கள் போலாம்பட்டி வனச்சரகத்தில் யானைகள் பயன்படுத்திவரும் வழித்தடத்தில் அமைந்துள்ளதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.  இந்நிலையில் ஈஷா அறக்கட்டளை கட்டிடங்கள் மீது மேல் நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியது. 

இதை எதிர்த்து  ஈஷா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இன்று நடைபெற்ற விசாரணையின்போது 2014-ம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பாணைபடி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது கல்வி பயன்பாட்டு கட்டிடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு பெற உரிமை உள்ளது என  ஈஷா தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. 

இரு தரப்பு வாதங்கள் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொண்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

No comments

Thank you for your comments