சாலையில் ஓடும் கழிவு நீர்.... பொதுமக்கள் சாலை மறியல்
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறிச் சந்தை அருகே உள்ள புதுத் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடுவதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல்... மாநகராட்சி அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொள்ள உறுதி அளித்தனர். இதையடுத்து கலைந்து சென்றனர்.
காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பின்புறம் உள்ள மாநகராட்சிக்கு உட்பட்ட 24-வது வார்டு தும்பவனம் அருணாசலம் தெரு பகுதியில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெரு முழுவதும் வெளியேறி சென்றுள்ளது.
மேலும் ராஜாஜி காய்கறிச் சந்தையில் இருந்து வெளியேறும் கழிவு நீரையும் மோட்டார் வைத்து இறைத்து தெருவில் விடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக தொடர்ந்து இப்பிரச்சினை நீடித்து வருவதால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் தெருவில் ஒன்றுகூடி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்களின் சாலை மறியல் போராட்டத்தை அறிந்து காவல்துறையினரும்,மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கழிவு நீர் உறிஞ்சு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு கழிவு நீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
கழிவுநீரை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டதைதொடர்ந்து சமாதானம் அடைந்து சாலை மறியலை கைவிட்டு பொது மக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் கழிவுநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.
No comments
Thank you for your comments