தைப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டம் - இன்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4-1-2022) 10 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள் தூள், மிளகாள் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, உளுத்தம் பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (4.1.2022) தலைமைச் செயலகத்தில், 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்கள்.
இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் இ. பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் வே. ராஜராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர். சு. பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ. சண்முக சுந்தரம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments