மாணவி தற்கொலையை அரசியலாக்க வேண்டாம்- அமைச்சர் அன்பில் மகேஷ்
சென்னை:
மாணவி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர் பாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம் மகள் லாவண்யா (வயது17). திருக்காட்டுப்பள்ளியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.
இவர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணத்துக்கு மதம் மாற வற்புறுத்தியதுதான் காரணம் என்று பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். பா.ஜனதா கட்சியினரும் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
விடுதியை சுத்தம் செய்யக்கோரி விடுதி வார்டன் மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்ற காரணத்துக்காக வார்டன் சகாயமேரி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவி தற்கொலை விஷயத்தில் போலீசாரும், பள்ளிக்கல்வி துறை சார்பிலும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராடும் அமைப்புகள் மாணவி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்.
இந்த விவகாரத்தில் மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்கொலை செய்த மாணவி படித்த பள்ளி கிறிஸ்தவ பள்ளியாக இருந்தாலும் அங்கு இந்துக்கள் நிறைய பேர் படிக்கின்றனர். எனவே பெற்றோர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், போராடும் அமைப்புகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையிலும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை பெற்று தரப்படும். பாகுபாடு இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
பள்ளியில் பிரச்சினை வந்தால் மறைக்காமல் அதிகாரியுடன் பேசி தீர்வு காண பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவி உயிரிழப்புக்கு காரணம் எதுவாக இருந்தாலும் இது போன்ற உயிரிழப்பு நடக்க கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு.
கேள்வி:- கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதே? பள்ளி பொதுத்தேர்வுகள் எப்போது நடத்தப்படும்?
பதில்:- 10, 11, 12-ம் வகுப்புகளை பொறுத்தவரை பொதுத்தேர்வுகள் நடந்தே தீரும். தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜனவரி 31ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா குறைய தொடங்கி உள்ளதாக தகவல் வருகிறது.
எனவே ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும்போது பள்ளிக்கல்வி துறை சார்பில் கருத்துக்களை முன் வைப்போம். மற்ற மாநிலங்களில் உள்ள நடைமுறைகளையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ஏற்கனவே வகுப்புகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே பள்ளிக்கூடங்கள் எப்போது திறந்தாலும் மே மாதம் தொடக்கம் அல்லது மே இறுதியில் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments