Breaking News

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தியை நிராகரிக்கப்பட்டதன் பின்னண என்ன?

சென்னை :

இந்தியத்திருநாட்டின் குடியரசு தின விழா அணிவகுப்பு கோலாகலம் உலகளவில் பிரபலம். அதைக் காண்பதே பெரும்பேறு. அதனால்தான் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஒபாமாவில் தொடங்கி பிரேசில் நாட்டின் இன்றைய அதிபர் ஜெயிர்போல்சொனரோ வரை பல நாட்டு பிரபலங்கள் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பிரமித்துப்போனார்கள் என்பது கடந்த கால சரித்திரம்.

குடியரசு தின விழா ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி நடைபெறுகிறது.  இந்த விழாவையொட்டி அணிவகுப்பு நடத்தப்படும்.

இதில்  நாட்டின் பன்முகத்தன்மையை, படைபலத்தை, சுதந்திரப்பற்றை, கலாசாரத்தை, பண்பாட்டை பறை சாற்றுகிற இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்

இந்த அலங்கார ஊர்திக்காக 36 மாநிலங்கள் மாடல்களை அனுப்பியிருந்தன. அதில் 12 மாநிலங்களின் மாடல்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த அணிவகுப்பில் ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி இடம் பெறுகிறதென்றால், அது அந்த மாநிலத்துக்கு தனி கௌரவம். இந்த கௌரவம்., நமது தமிழ்நாட்டுக்கு 2019, 2020, 2021 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் கிடைத்தது.

இந்த ஆண்டு மறுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் நாட்டின் விடுதலைப்போரில் தமிழர்களின் சுதந்திரப்பற்றை பறை சாற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் இதயங்களில் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பிற்காக 7 வரைபடங்களை தமிழக அரசு தயாரித்தது.

வீரமாய் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை மையப்படுத்தி ஒன்று... இதையொட்டிய மாதிரியில் வ.உ.சி. கப்பல் முன் நிற்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. ஆனால் வ.உ.சி.யின் மார்பளவு சிலையை வைத்திருந்தால் பின்புற காட்சி மறைக்கப்படாது என்று 9 உறுப்பினர்களை கொண்ட மத்திய அரசு கமிட்டி முதலில் கருதியது.

மூன்றாவது சுற்றில் நடந்ததுதான் வேடிக்கையானது. மத்திய அரசு கமிட்டியின் உறுப்பினர் ஒருவர் கேட்டாராம், “ஆமாம், இந்த வ.உ.சி. என்ன தொழில் அதிபரா?” என்று.

அலங்கார ஊர்தியை தேர்வு செய்யும் இடத்தில் வ.உ.சி. யார் என்று தெரியாதவர்கள் இருக்கிறபோது, அவரைப்பற்றி என்னதான் எடுத்துச்சொன்னாலும், அது செவித்திறனற்றவர்கள் காதில் ஊதிய சங்குதானே?.

சுதந்திரப் போராட்டத்தில் விடுதலைப்பற்றை தன் கவிதையால் ஊட்டிய பைந்தமிழ் தேரின் சாரதியாம் பாரதி... விடுதலைப்போராட்டத்தில் வீராங்கனைகளோடு வீர மங்கை வேலு நாச்சியார் தோன்றும் காட்சிகளெல்லாம் இடம்பெற்றிருந்தன.

இரண்டாவது கட்ட பரிசீலனையில் மத்திய அரசின் கமிட்டி உறுப்பினர்கள் சொன்னார்களாம்-

வீர மங்கை வேலுநாச்சியார், ஜான்சி ராணி போல காட்சி அளிக்கிறார். அவர் அமர்ந்திருக்கிற குதிரையின் நிறத்தை பழுப்பு நிறத்துக்கு மாற்றுங்கள் என்று. ஜான்சி ராணிக்கு முந்தைய காலத்தவர் வீர மங்கை வேலு நாச்சியார், ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு தன் நாட்டை இழந்து, மீண்டும் வென்ற ஒரே ராணி என்பது சரித்திரம்.

வேலூர் கோட்டை, மருதுபாண்டியர் சகோதரர்களைக் காட்டும் வரைபடங்கள் கடுமையான சித்தரிப்புகள் என்று மறுக்கப்பட்டிருக்கின்றன. இந்த மருதுபாண்டியர்களை தேசிய அளவில் தெரியாதே என்று சொன்னாராம், கமிட்டி உறுப்பினர் ஒருவர்.

மூன்றாவது கட்ட பரிசீலனையில் வ.உ.சி.யின் மார்பளவு சிலையுடன் கப்பல் மாதிரி வடிவமைப்பையும், பாரதி வீராவேசத்தோடு முழங்குவதுபோலவும் விடுதலைப்போராட்ட வீரர்கள் அன்னிய பொருட்களை தீயிட்டு எரிப்பது போலவும், வீர மங்கை வேலுநாச்சியார் பழுப்பு நிற குதிரையில் பச்சை சேவையில் தோன்றுவதுபோலவும், மருதுபாண்டியர் சகோதரர்கள் வாளோடும் 4 வீரப்பெண்கள் ஈட்டியை ஏந்தியிருக்கும் மாதிரி வடிவமைப்புகளை தமிழக அரசு தயார் செய்து அனுப்பியது.

மத்திய அரசின் கமிட்டி உறுப்பினர்கள் 3 முறை சொன்ன திருத்தங்கள் செய்யப்பட்டும் நிராகரித்து இருக்கிறார்கள். 

இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாக கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் இவர்களை சர்வதேச தலைவர்களுக்கு யாரென்றே தெரியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4 ஆவது சுற்று வரை சென்ற நிலையில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அது போல் மேற்கு வங்காளத்தின் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆண்டு பிறந்த நாளையொட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையிலான அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து உள்ளது.

இதேபோல், கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இவர், 'ஒன்றே குலம்; ஒருவனே தெய்வம்' என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இவரின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

தென்னிந்தியாவில் தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் கர்நாடகா அரசின் அலங்கார ஊர்திக்கு மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு.. தூங்குகிறவர்களை எழுப்பி விடலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்பி விட முடியாது. மறுக்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் அதற்கு காரண காரியங்கள்தான் ஏது?

‘இந்தியா-75’ அணிவகுப்பில் வேண்டுமானால், தமிழகத்தை நிராகரித்து இருக்கலாம். ஆனால், விடுதலைப்போராட்டத்தில் வீரமங்கை வேலு நாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., பாட்டினாலே நாட்டை அதிர வைத்த பாரதி உள்ளிட்டோர் ஆற்றிய பங்களிப்பை யாராலும் நிராகரிக்க முடியாது என்பதே நிதர்சனம்...  

ஆனாலும் கெத்து காட்டும் விதமாகவும் சவால் விடும் விதமாகவும்,  டெல்லியில் குடியரசு தின விழா அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம்பெறும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,  நாட்டுப்பற்றிலும் விடுதலை வேட்கையிலும் தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக மாநில அரசின் சார்பில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் நமது அலங்கார ஊர்தி இடம்பெறும். 

 தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் அலங்கார ஊர்தி மக்களின் பார்வைக்காக அனுப்பி வைக்கப்படும். சமீபத்தில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற புகைபப்ட கண்காட்சியை நாட்டின் பிற முக்கிய நகரங்களில் நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

 

No comments

Thank you for your comments