கொழுந்தியாளுக்கு வலை வீசிய மாமா ... கூண்டோடு போலீசில் சிக்கிய சம்பவம்...
தும்கூர் :
கர்நாடகாவில் மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட ஆசை நாயகன், அவரை திட்டம் போட்டு கார் வைத்து கடத்திச் செல்ல முயன்று சிசிடிவி ஆதாரத்தோடு கூண்டோடு போலீசில் சிக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறான். 4 ஆண்டுகளுக்கு முன் கொடிகெனஹள்ளி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் தேவராஜுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்று இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே மனைவியின் தங்கை மீது ஒரு கண்ணாக இருந்த தேவராஜ், அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைத்திருக்கிறான்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண்ணிடம் தகாத முறையில் பேசுவதும், நடந்து கொள்வதுமாக இருந்த தேவராஜ், திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதற்கு அந்த பெண் ஒத்துக் கொள்ளாத நிலையில், விஷயம் வீட்டுக்கு தெரிந்து மனைவியும், மனைவியின் குடும்பத்தினரும் தேவராஜை கண்டித்துள்ளனர்.
அப்போதும் ஆசை அடங்காமல் சுற்றித்திரிந்த தேவராஜ் அந்த பெண்ணை கடத்திச் சென்று இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியிருக்கிறான்.
இந்த நிலையில் தான், கடந்த 22-ந் தேதி தனது நண்பர்கள் 2 பேரை அழைத்துக் கொண்டு காரில் அந்த பெண் வேலை செய்து வரும் பெங்களூருவுக்கு வந்திருக்கிறான் தேவராஜ். அங்கு, அவர் வேலை முடிந்து வீட்டுக்கு நண்பருடன் பைக்கில் செல்லும் போது, காரில் பின் தொடர்ந்து சென்ற தேவராஜ், பைக்கை வழிமறித்ததோடு, தப்பித்து ஓட முயன்ற அந்த பெண்ணை மல்லுக்கட்டி வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றான்.
வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் சந்தேகமடைந்து புகாரளித்த போது, போலீசார் விசாரணையில் பெண் கடத்தப்பட்டது சிசிடிவி காட்சிகள் மூலம் அம்பலமானது.
பின்னர், கார் பதிவெண்ணை வைத்து நடத்திய விசாரணையில், பெண்ணை கடத்தியது அவரது அக்காள் கணவர் தேவராஜ் என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கார் பதிவெண்ணை அனைத்து காவல் நிலையங்கள், சோதனைசாவடிகளுக்கும் அனுப்பி உஷார்படுத்திய போலீசார், ஹாசன் பகுதியில் வாகன தணிக்கையின் போது மடக்கி பிடித்தனர்.
காருக்குள் தேவராஜும் அவனது நண்பர்கள் இரண்டு பேரும் அந்த பெண்ணும் இருந்த நிலையில், மூன்று பேரையும் கைது செய்து பெண்ணை மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவியின் தங்கைக்கு ஆசைப்பட்டு சுற்றித்திரிந்த மன்மத மாமா, சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்
No comments
Thank you for your comments