தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு:
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், முன்னேற்பாடு பணிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது....
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 27.01.2022 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து, தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணிஅவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான சாதாரணத் தேர்தல்களுக்கு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் நன்னடத்தை விதிகள் 26.01.2022 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் 28.01.2022 அன்று துவங்கும்.
வேட்பு மனுக்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பெறப்படும். 04.02.2022 அன்று வேட்பு மனு தாக்கல் செய்தவதற்கான இறுதி நாளும் ஆகும்.
05.02.2022 அன்று வேட்பு மனுக்களை ஆய்வு செய்தலும், 07.02.2022 அன்று வேட்பு மனுக்களை திரும்பப் பெறுதலும், 19.02.2022 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்குப்பதிவும் நடைபெறும்.
கடைசி ஒரு மணி நேரம் அதாவது, மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை கோவிட்-19 அறிகுறி உள்ளவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.
மேலும், 22.02.2022 அன்று 8.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 24.02.2022 அன்று காலை தேர்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும். 02.03.2022 அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின்
முதல் கூட்டமும் மற்றும் பதவி ஏற்பும் நடைபெறும். மேலும், 04.03.2022 அன்று மறைமுகத் தேர்தல்கள் மூலம் மாநகராட்சிகளுக்கான மேயர், மற்றும் துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான தலைவர்
மற்றும் துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறும். வேட்புமனுக்கள் தாக்கல் செய்தல், வேட்பு மனுக்களை ஆய்வு செய்தல், வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் மற்றும் சின்னங்கள்
ஒதுக்கீடு செய்தல் ஆகிய நிகழ்வுகளை கண்காணிப்புக் கேமரா மூலம் பதிவு செய்திட ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரு மாநகராட்சியில் 443 வாக்கு சாவடி மையங்களிலும், 4 நகராட்சிகளில் 153 வாக்குச்சாவடி மையங்களிலும், 42 பேரூராட்சிகளில் 655 வாக்குச்சாவடி மையங்களிலும் என மொத்தம் 1251 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கு 66 எண்ணிக்கையில் 3 சுழற்சி முறையில் பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மாநகராட்சி மன்ற உறுப்பினர், நகராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய அனைத்து பதவியிடங்களுக்கான தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடைபெறும். கோவிட் - 19 பெருந்தொற்று
தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்திட தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வத்துறை, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மற்றும்
பொது சுகாதாரம் நோய்தடுப்பு மருந்து இயக்கம் ஆகியவற்றுடன் ஆலோசித்து ஆணை வெளியிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச்சாவடிகளில் சாய்வு தளம், சக்கர நாற்காலி
மற்றும் துணையாள் ஆகியவை அமைத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை கண்காணிப்பு கேமரா,
நுண்பார்வையாளர்கள், இணையதள காண்காணிப்பு ஆகியவற்றின் மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
எனவே, மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க ஏதுவாகவும், வாக்குச்சாவடிகள் வாக்குப்பதிவு பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்லவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறவும்
அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் க.சிவகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜெகதீசன், செல்வராஜ் (தேர்தல்), உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சி.நடேசன், உட்பட அனைத்து
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments