Breaking News

பொங்கலுக்கான கரும்பை விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவு

சென்னை:

கரும்பு கொள் முதல் செய்யும்போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.


தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, கரும்பு கொள்முதல் குறித்து, கீழ்க்கண்ட தெளிவான வழிமுறைகள், தமிழக அரசால் வெளியிடப்படுகின்றன:

1. பன்னீர் கரும்பு மட்டுமே கொள்முதல் செய்யப்பபட வேண்டும்

2. கொள்முதல் செய்யப்படும் முழு கரும்பின் விலை அதிகபட்சம் ரூ.33 ஆக இருக்க வேண்டும்.

3. கொள்முதல் செய்யப்படும் கரும்பின் உயரம் 6 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

4. கொள்முதல் செய்யப்படும் கரும்பு மெலிதாக இல்லாமல் சராசரி தடிமனைவிட கூடுதலாக இருக்க வேண்டும்.

5. நோய் தாக்கிய கரும்பு கொள்முதல் செய்யப்படக் கூடாது.

6. அந்தந்த மாவட்டங்களில் விளையும் கரும்பினை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதில் விவசாயிகள் தரப்பிலிருந்து எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்கக் கூடாது.

7. இந்த வருடம் கரும்பு கொள்முதல் விலை 10 சதவீத அதிகரிக்கப்பட்டுள்ளதால், அதற்கேற்றவாறு விவசாயிகளிடம் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட விலையைவிட கூடுதலாக விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் கடந்த ஆண்டு கொள்முதல் செய்த விலையையோ அல்லது அதற்கு குறைவாகவோ விலை நிர்ணயம் செய்யப்படக் கூடாது.

8.கரும்பு கொள் முதல் செய்யும்போது, அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாகவோ அல்லது வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் மூலமாகவோ மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் இடைத்தரகர்கள் அனுமதிக்கப்படக் கூடாது.

9. கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான விலை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்.

10. எந்தெந்த நாளில் எத்தனை அட்டைகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறதோ, அதற்கேற்றவாறு கரும்பு படிப்படியாக கொள்முதல் செய்யப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் முன்கூட்டியே அனைத்து கரும்பையும் கொள்முதல் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் கரும்பு காய்ந்து போவதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments